Skip to main content

துளிநிறைவு - குருகு கட்டுரை ✨



        குருகு இதழில் அடியேனின் கட்டுரை பிரசுரமாகியுள்ளது. குருகு கலை, பண்பாடு, வரலாற்று, நிகழ்த்து கலை ஆகிய தளங்களில் செயல்படும் இணைய இதழ். அ கா பெருமாள், ஜெயமோகன் போன்ற தமிழ் பண்பாட்டின் முக்கியமான முகங்களின் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. ஆய்வாளர் வேதாச்சலம், David attenbrough குறித்த சிறப்பிதழ்கள் வந்துள்ளன. மூன்றாண்டுகளாக தொடர்ந்து வெளி வரும் இந்த இதழின் 25ம் இதழ்  கோயில் கலை செல்வர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

        இந்தியாவில் பேரரசுகளின் சரிவிற்கு பின் காலனியாதிக்க கால கட்டம் வரையில் கோயில் கலை வரலாற்றில் ஒரு அகழி இருந்தது. அதற்கு பல்வேறு அரசியல் சமூக காரணங்கள் உள்ளன. மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுந்து வந்து இந்த ஆய்வுகளை தொடங்கும் வரை அந்த அகழி நிரப்பப்படாமல் இருந்தது. Hultzsch, கல்வெட்டு அறிஞர் ராவ் பகதூர் Venkaiyya இருவரும் தஞ்சை பெரியகோயிலை கட்டியவர் ராஜராஜன் என்று வெளிக்கொணர்ந்தனர்.

        அன்றிலிருந்து தொடங்கிய கல்வெட்டியல், கோயில் கலை வரலாற்றாசிரியர்களில் முக்கியமான ஆளுமை குடவாயில். தமிழ்நாடு தொல்லியல் துறையின் நிறுவனர் முதல் இயக்குனர் நாகாசாமியின் மாணவர். நந்திபுரம் குறித்த அவரது ஆராய்ச்சி கட்டுரை மிகுந்த வரவேற்பையும் கவனத்தையும் பெற்றது. தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் என்ற மூன்று பெருங்கோயில் குறித்த புத்தகங்கள் கோயில் கலை வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் நிகழ்ந்த பெரும் பாய்ச்சல் என்று ஜெ குறிப்பிடுகிறார்.

        குடவாயில் பாலசுப்ரமணியன் அரை நூற்றாண்டு காலமாக தமிழக இந்திய கோயில் கலை வரலாற்று ஆய்வில் இயங்கி வரும் ஆளுமை. மாமன்னன் ராசேந்திரன் பிறந்த நட்சத்திரம் ஆடி திருவாதிரை(ஆரூர் கோயில் கருவறை கல்வெட்டு), திருமுறை கண்ட சோழன் ராஜ ராஜன் இல்லை(தேவார மாண்பும் ஓதுவார் மரபும்) என்ற வெள்ளைவாரணனாரின் ஆய்வு முடிவை முன்னெடுத்து விரிவாக்கியவர் போன்ற முக்கியமான ஆய்வு முடிவுகள் பலவற்றை செய்தவர். 

        தாராசுரம் குறித்த அவரது ஆய்வு 1970ல் தொடங்கி 2013ம் ஆண்டு பெருநூல் வெளியாகியது. இரண்டாம் ராஜராஜன் எழுப்பிய கற்கோயிலுக்கு இணையானதொரு சொற்கோயிலை எழுப்பியவர். பெருங்கோயில் புத்தக வரிசையே மகத்தானதெனினும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் புத்தகம் அதனினும் மகத்தானது. கண்டபாத திருத்தொண்டர் குறுஞ்சிற்பங்கள் குறித்த பகுதி சிறப்பானது.பெருஞ்செயல் புரிபவர்கள் வெள்ளிகீற்று போல ஒருநாள் மட்டும் அதனை நிகழ்த்தி ஒடுங்குபவர்கள் இல்லை. அனாதியாக நின்று இயங்கிக்கொண்டிருப்பவர். ஒவ்வொரு நாளும் அவரிடம் பெற்றுக்கொள்ளும் மாணவானாக எனக்கு நிறைய அருள் செய்திருக்கிறார். 78 வயதாகும் குடவாயில் அவரது நேர்காணலை இப்படி முடிக்கிறார்.

 


தற்போது என்ன ஆய்வில் ஈடுபட்டு வருகிறீர்கள்

பதில்: என்னுடைய பெருங்கோவில் நூல்கள் வரிசையில் இன்னும் இரண்டு நூல்கள் வெளியாகவுள்ளன. அதற்கான எனது நேரம் முழுமையும் செலவழித்து வருகிறேன். இன்னும் செய்து முடிக்க வேண்டிய திட்டங்கள் பல உள்ளன.


        மூணூற்றிற்கும் மேற்பட்ட கலை வரலாற்று கட்டுரைகள், பெருநூல்கள், ஆய்வு கட்டுரைகள் எழுதிய பின்னர் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் ஆய்வாளரை இயக்குவது வரலாறெனும் தெய்வம். 

        இந்த குருகு இதழ் மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ளது. அவரை ஒரு பண்பாட்டு முகமாக விளக்கும் கட்டுரைகள், அவரது நூல் குறித்த அவதானிப்புகள், குடவாயில் நூல்கள் குறித்த கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள் உள்ளன.

        குடவாயில் பாலசுப்ரமணியன் கட்டுரை தொகுப்பான பனை உறை தெய்வம் என்னும் 25 கட்டுரைகள் தொகுப்பை குறித்த அடியேனுடைய கட்டுரையும் பிரசுரமாகியுள்ளது. பேராசான், பண்பாட்டின் முகம் ஒருவரை குறித்த இதழில் சிறு  பங்காற்றியிருக்கும் துளி நிறைவுடன் இருக்கிறேன். திருவருள். குருகு இதழின் ஆசிரியர் குழுவிற்கும், ஆசிரியர் நிரைக்கும், நண்பர்களுக்கும் நன்றியும் அன்பும். 

கட்டுரை சுட்டி - பனை உறை தெய்வம் - குருகு கட்டுரை



முன்னத்தியேரை பாடி நிறுத்துவது இம்மண்ணின் தொல்மரபு. நம் குடியின் மூத்தோன் திருத்தொண்டதொகை பாடிய ஆலால சுந்தரன் !



மனோ 


Comments

Popular posts from this blog

செய்நன்றி ❤️✨

எனது கல்லூரி துறைத்தலைவர் இப்போது Pollachi Institute of Engineering and Technology கல்வி ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் அழைப்பின் பேரில் Pollachi Institute of Engineering and Technology என்ற கல்லூரியில் சென்ற திங்கள் அன்று முதலாம் ஆண்டு, மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றினேன். இதை சொன்னபோது சில நண்பர்கள் ஆர்வத்துடன் என்ன பேசப்போகிறேன் என்று கேட்டனர், 2 நாட்கள் உழைத்து தயார் செய்த உரையென்பதாலும் பொதுவான உரையென்பதாலும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ஆற்றிய உரையை இங்கு எழுதுகிறேன். (இது உரையின் எழுத்து வடிவம், சென்ற வாரம் கேட்டுக்கொண்டார்கள் என்பதை, “போன வாரம் கேட்டாங்க” என்று வாசிக்கவும்)  Dear Boys and girls சென்ற வாரம் mam அழைத்து முதலாம் ஆண்டு மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சொன்னபோது நான் கேட்ட முதல் கேள்வி ஆங்கிலத்திலா தமிழிலா என்று, பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் அதனால் தமிழ் ஆங்கிலம் கலந்து பேசும்படி சொன்னார். முழுதும் தமிழில் பேசினாலும் செயற்கையாக இருக்கும், முழுதும் ஆங்கிலத்தில் பேசினாலும் பின் தொடர்வதில் சிக்கல் இருக்கும். மறுநாள் தான் ஒப்புக்கொண்ட...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...