Skip to main content

ஒரு குட்டி வாழ்க்கை ✨

ஒரு குட்டி வாழ்க்கை

கன்னிமாரா நூலகம்

கன்னிமாரா நூலகம் செல்லவும் ராஜாவின் simphony கச்சேரிக்குமாக சென்ற வெள்ளி இரவு நண்பர்களுடன் மெட்ராஸ் சென்றுவந்தோம்.

சென்னை குறித்த எனது முதல் நினைவென்பது AIPMT (All India Pre Medical Test)தேர்வுக்காக 2015ம் ஆண்டு அப்பாவுடன் அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா வந்தது தான். இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றால் அகில இந்திய அளவில் மருத்துவக்கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் மருத்துவ இடம் கிடைக்கும் என்று செய்தித்தாள்களில் படித்து அதற்காக வந்திருந்தோம். அப்போது பலருக்கும் இருப்பதை போன்று ஒரு பிரமிப்புணர்வு தான் இருந்தது. பின்பு பல முறை மாமா வீட்டிற்கும் உணர்வினர் வீட்டிற்கும் கடந்த சில ஆண்டுகளாக புத்தக கண்காட்சிக்கும் என சென்னை பழக்கப்பட்ட நகரமாகிவிட்டது. 


சென்னை எனக்கு எப்போதுமே தொன்மையின் நகரம். Robert Bruce Foot பல்லவரத்திற்கு அருகில் பழங்கற்காலத்தை சேர்ந்த கல் கருவிகளை கண்டுபிடித்தார். கற்காலத்திலிருந்து காலனியாதிக்க காலகட்டம் வரை மெட்ராஸ்ற்கு ஒரு அறுபடாத வரலாற்று தொடர்ச்சி இருக்கிறது. சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் மயிலாப்பூரின் வாயிலர் நாயனாரை “தொன்மையிலை வாயிலார் அடியார்க்கும் அடியேன்” என்று குறிப்பிடுகிறார். சம்பந்தர் பூம்பாவை பதிகத்தில் “தொல்கார்த்திகை நாள்” விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் என்கிறார். பண்பாட்டு ரீதியாகவும் இந்த நிலம் Mighty past ஐ கொண்டிருக்கிறது.


பல வரலாற்று நூல்களில் Annual Report on Epigraphy 1891 என்று அடிக்குறிப்புகளை பார்த்திருக்கிறேன். ஆனால் 1891ம் ஆண்டறிக்கை Archive தளத்திலும் இணையத்திலும் எங்குமே கிடைக்கவில்லை. நண்பர் அவிநாசி தாமரை கண்ணன் சென்னை கன்னிமாரா நூலகத்தில் இருந்து அந்நூலில் குறிப்பெடுத்துள்ளதாக சொன்னார். 1891ம் ஆண்டு தொகுதியில் திருவானைக்கா மற்றும் திருச்சி வட்டார கோயில்களில் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு குறிக்கப்பட்டுள்ளன. பின்னாளில் வந்த ஆண்டறிக்கைகளில் அவை மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன ஆனால் எண் வரிசை மாறியுள்ளது. இந்நூலிற்காகவே தான் இந்த சென்னை பயணம். மாலை ராஜா சிம்போனி கச்சேரியும் விக்டோரியா ஹால் சென்ற முறை பார்க்காமல் விட்ட எழும்பூர் அருங்காட்சியகத்தில் கல் சிற்பங்கள் அரங்கம், திருவொற்றியூர் கோயில் மற்றும் பார்த்தசாரதியையும் பார்ப்பதாக திட்டம் வைத்திருந்தோம்.


காலை சென்ட்ரலில் இறங்கி அறையில் குளித்து உடைமாற்றி முருகன் இட்லி கடையில் உண்டு கன்னிமாரா நூலகம் சென்றோம். புதிய கட்டிடத்தில் முதல் தளத்தில் குறிப்புதவி நூல்கள் பகுதியில் இருந்த கணினியில் தேடியபோது Old buildingல் இருப்பதாக காட்டியது. கன்னிமாரா நூலகத்தில் இப்போது மராமத்து பணிகள் நடைபெறுகின்றன. புதிய கட்டிடத்தில் இருந்து நடைபாலம் மூலம் செல்லும் வழியை தவிர மற்ற வழிகள் அடைக்கப்பட்டிருந்தன. 


கன்னிமாரா நூலகம் 1896ல் இருந்து செயல்பட்டு வரும் இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று. 6 லட்சம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. அரை வட்ட படிப்பறையில் நின்று உள்ளே பார்த்தபோது தெய்வத்தின் சந்நிதியில் நிற்பதை போல அத்தனை கொந்தளிப்புடன் நின்றுகொண்டிருந்தேன். ராட்சத மூளையின் நுண் முடிச்சில் நிற்பதை போன்றிருந்தது.

கன்னிமாரா நூலகம் 


காலனிய கால பிரிட்டிஷாருக்கு இரண்டு முகங்கள் இருந்தன. ஒன்று ஒட்டுமொத்த தேசத்தின் உழைக்கும் மக்களின் பிடரியில் பூட்ஸ் கால்களை வைத்து அழுத்திக்கொண்டிருந்தது. இங்கிருந்த செல்வத்தை நூற்றுக்கணக்கான கப்பல்கள் மூலம் கொள்ளையடித்து சென்றது.பல கவர்னர்கள், கலெக்டர்கள், இறுதியாக வின்ஸ்டன் சர்ச்சில் போன்றவர்கள் இந்த முகம் கொண்டவர்கள். மற்றொரு முகம் இந்திய ஞானத்தை, தன் மொத்த வாழ்கையையும் கொடுத்து தொகுத்து இந்த அந்நியமன்னின் மக்களுக்கு அவர்கள் யார் என்று சொன்னது. 50 புத்தகங்கள் கொண்ட Sacred books of the east என்ற தொகுப்பு இதன் உட்சபட்ச சாதனை. Max Muller, Monier Williams போன்ற பேரறிஞர்கள் தொடங்கி கல்வெட்டு, தொல்லியல் அறிஞர்களின் நிறை. முதல் முகம் செய்த பாவங்களை இரண்டாம் முகம் ஈடு செய்துகொண்டே இருந்தது. 

கன்னிமாரா நூலகம் - வாசிப்பறை விதானம்


வேண்டிய புத்தகங்களை நூலகர் சிறிய சீட்டில் எழுதித்தர சொல்லி வாங்கிக்கொண்டார். Annual Report on Epigraphy 1891-1905, 1905-1910 என்று எழுதிக்கொடுத்தேன். உடனே கொண்டு வந்து கொடுத்தார். முதல் பக்கத்திலேயே அதிர்ச்சி இதுவும் மூலம் இல்லை. 1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மீள்பதிப்பு. அதனால் சில பக்கங்கள் மட்டுமே இருந்தன அதுவும் வரிசை மாற்றப்பட்டு. 1886ம் ஆண்டு Hultzsch இன்னும் ஜெர்மானிய இந்தியவியலாளர் இந்திய தொல்லியல் துறையில் கல்வெட்டு பிரிவை தொடங்கி முதல் ஆண்டறிக்கையை வெளியிட்டார். ஒவ்வொரு ஆண்டும் கள ஆய்வு செய்து கல்வெட்டுக்களை படியெடுத்து விரிவான அறிக்கை சமர்பித்து அடுத்த ஆண்டுக்கான நிதி வழங்கும் படி கோருவதற்காக ஆண்டறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. முதலில் 1891-1905 புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தார். “உள்ள வந்து பாருங்க வேற என்ன புக்குலாம் வேணும்னு சொல்லுங்க ஒரேடியா எடுத்து குடுக்குறேன்” என்று சொன்னார். இப்படி உதவி செய்யும் கனிவான நூலகர்கள் அருகி வருகிறார்கள். திருவானைக்கா நூலகத்தில் தற்போது இருக்கும் அம்மையார் உடன் பல கசப்பான அனுபவங்கள் எனக்குண்டு. அங்கு அமர்ந்திருந்த மற்றொரு நபர் உள்ளே வாசகர்கள் வரக்கூடாது எந்த கட்டுக்கோப்பை பாதுகாக்க வந்திற்கும் தேவ தூதர். 1891ம் ஆண்டு புக் வேண்டுமென்று கேட்டு முடிப்பதற்குள் “அதெல்லாம் இருக்க வாய்பில்லை” என்றது அந்த ஜென்மம். “1891 அண்ணா குடுத்துட்டாரு, 1906-1910 வேணும்” என்று சொன்ன பின் முன்னவர் எடுத்துகொடுத்தார். மீண்டும் அது பேஸ்புக்கில் விஜய்யை குறித்த வசை காணொளி ஒன்றிற்குள் மூழ்கிக்கொண்டது. 1891,1903,1905,1908,1910 ஆகிய ஆண்டுகளில் வந்த திருவானைக்கா கோயில் கல்வெட்டுக்களை புகைப்படம் எடுத்துக்கொண்டு நன்றி சொல்லி கிளம்பினோம். 


முகலிங்கம் - அகோரம் 

எழும்பூர் Bronze gallery தமிழகத்தின் தலை சிறந்த ஐம்பொன் சிற்பங்கள் ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது. பல்லவர் காலத்தின் இறுதியில் தொடங்கி முற்கால சோழர், பிற்கால சோழர் இறுதியாக 16ம் நூற்றாண்டு வரையிலான பல ஐம்பொன் சிற்பங்கள் இங்குள்ளன. அதை முன்பே பார்த்திருக்கிறோம். இந்த முறை கல் சிற்பங்கள் இருக்கும் Main Building பார்க்க சென்றோம். இப்போது தான் முதல் தளத்தை புதுப்பித்திருக்கிறார்கள். ஹொய்சால, நுளம்ப கலைப்பாணி சிற்பங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. பேலூர் ஹலபீடு கோயில்களில் உள்ளதை போன்ற ஒரு ஹொய்சால நுழைவாயில் ஒன்று இங்குள்ளது. சிலர் சுரண்டி பார்த்து உண்மையாகவே கல் தானா என்று உறுதி செய்துகொண்டிருந்தனர். திருச்சென்னம்பூண்டி கோயிலில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் உறையூரிலிருந்து கொண்டுவரப்பட்ட துர்கை சிற்பம் மற்றும் புதிய கட்டிடத்தில் உள்ள யோகினி, சாமுண்டி சிற்பங்கள் அற்புதமானவை. யோகினி பிரேத குண்டலம் அணிந்திருந்தாள் ராஜேந்திரன் எழுப்பிய நிசும்ப சூதினி கோயிலில் பிரேத குண்டலம் பார்த்த ஞாபகம் இறந்த உடலையே வளைந்த நிலையில் குண்டலமாக அணிந்திருக்கிறாள் தேவி.


முகலிங்கம் - வாமதேவம் 

Guntur பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முக லிங்கம் மிகச்சிறந்த சிற்பம் சிவனின் ஐந்து முகங்களாக தத்புருஷம்-கிழக்கு, அகோரம்-தெற்கு, சத்யோஜதம்-மேற்கு,  வாமதேவம்-வாமதேவம் என நான்கு திசைக்கு நான்கு முகங்களும் ஈசானம் அதோ முகமாகவும் அமைந்தது முக லிங்கம். திருவானைக்கோவில் ராஜராஜேஸ்வரர் கோயில், திருவதிகை வீரட்டானம், காஞ்சி ஏகாமபரேஸ்வரர் போன்ற சில கோயில்களில் முக லிங்கங்கள் உள்ளன. அருங்காட்சியத்தில் இருந்து வெளியில் வந்தபோது Nolamba sculptures என்ற C சிவராம மூர்த்தியின் புத்தகம், An outline of indian temple architecture FH Gravely காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நூலை கேட்டபோது சீட்டு கிழிக்கும் பெண் என் வேலை சீட்டு கிழிக்குறது தான் புக்குலாம் குடுக்க முடியாது என்றார். நுழைவு சீட்டு வழங்கும் புத்தக கடையில் இந்த புத்தகம் இருப்பு இல்லை என்பதால் இங்கு கேட்க சொன்னார்கள் என சொன்னதற்கு இந்த பதில். சொல்லியதை மட்டும் இம்மியும் விலகாது செய்யும் Typical அரசு ஊழியர். நல்லவேளையாக இரண்டு புத்தகங்களும் Archive தளத்தில் உள்ளன. 


சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள லகுலீசர்

மதியம் உணவு முடித்து மாலை நேரு விளையாட்டரங்கத்தில் ராஜாவின் சிம்போனி கட்சேரி. Valiant சிம்போனியை லண்டனில் அரங்கேற்றியபின் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில் அரங்கேற்றப்பட்டது. அதன் பின் இப்போது தான் பொதுமக்கள் முன்னிலையில் இந்த கட்சேரி நடைபெறுகிறது. மேற்கத்திய இசையில் பெரிதாக அறிமுகம் இல்லாததால் முழுதும் உள்வாங்க முடியவில்லை. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். ஆனால் ஒரு இசை வடிவமாக பிரம்மாண்டமாக இருந்தது. Nikil thoms conductor மற்றும் இசைக்கலைஞர்கள் அனைவரும் Czech குடியரசில் இருந்து வந்திருந்தனர். இரண்டாம் பாதி முடியும்போது ராஜாவின் தமிழ் திரைப்பட பாடல் இசைக்கப்பட்ட போது கூட்டம் விழித்துக்கொண்டது. ஒரு ஆன்மீகமான அனுபவம்.



ராஜா 👑 


மறுநாள் காலை திருவொற்றியூர் எனும் ஆதிபுரி சென்றிருந்தோம். சென்ட்ரலில் -3ம் தளத்தில் ஏறிய ரயில் திருவொற்றியூர் தேரடி மெட்ரோவில் 2ம் தளத்தில் இறக்கிவிட்டது. சமகாலத்தில் நிகழ்ந்த பெரும் சாதனைகளில் ஒன்று சென்னை மெட்ரோ. 


சென்ற முறை திருவொற்றியூர் வந்தபோது மாணிக்க தியாகர் சந்நிதிக்கு பின் உள்ள பிரம்மாண்டமான கௌளீஸ்வரர் சிற்பத்தை இருளில் முழுதாக பார்க்காமல் சென்று விட்டேன். மங்கை வீராராகவன் எழுதிய தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூலில் இந்த சிற்பத்தை லகுலீசரின் சிற்பம் என்று அடையாளப்படுத்துகின்றனர். பத்மாசனத்தில் நான்கு கரங்களுடன் இடது மேல் கரத்தில் கபாலமும் வலது மேல் கரத்தில் சூலமும், வலது முன் கரத்தில் சின் முத்திரையும் முன் இடது கரம் தவம் செய்யும் கோலத்திலும் உள்ளது. இரு காதுகளிலும் ஸ்படிக குண்டலங்களும் கழுத்தில் ஸ்படிக மாலையும் அணிந்து ஜடபாரத்துடன் அமைந்துள்ளார். நேற்றைய தினம் எழும்பூர் அருங்காட்சியகத்திலும் இதே அமைப்புடைய லகுலீசர் சிற்பத்தை பார்த்தேன். லகுலீசர் குஜராத்தின் தற்போதய கயாரோகன் பகுதியில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் பிறந்தவர். சிவனின் வடிவமாக கருதப்படும் லகுலீசர் பாசுபத மார்க்கத்தை இந்திய முழுக்க பரப்பினார். தென்னகத்தில் பாசுபத மார்கத்தின் முக்கிய மையமாக திருவொற்றியூர் திகழ்ந்திருக்கிறது. பிற்கால சோழர்கள் பசுபத சைவத்தை சார்ந்தவர்கள். பள்ளிப்படை எடுக்கும் மரபு பாசுபத பிரிவின் முக்கியமான அம்சம். ஒற்றியூரில் சதுராணன பண்டித மடம் ஒன்று சோழர் காலத்தில் இருந்திருக்கிறது. 


திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில்

மூவர் முதலிகளின் காலத்திற்கு முன்பிருந்தே முக்கியமான சைவ தலமாக திருவொற்றியூர் இன்னும் ஆதிபுரி விளங்கியிருக்கிறது. கலிய நாயனாரின் அவதார, முக்தி தலம். சுந்தரர் இந்த தலத்தில் பல நாட்கள் சங்கிலியாருடன் இருந்து தொண்டாற்றியிருக்கிறார். கோயிலின் மூலவர் படம் பக்க நாதர் பிரம்மாண்டமான ஆவுடையும் லிங்கமும் கொண்டுள்ள திருமேனி. மூலவர் சந்நிதிக்கு முன்னுள்ள சோழர் கால துவாரபாலகர் திண்டி முண்டி இருவரும் வேறு எங்கிருந்தோ இடம் பெயர்ந்துள்ளனர். இடது புறம் உள்ள துவார பாலகரின் லலாட பட்டம் - நெற்றி சுட்டியில் உள்ள நடராஜரும் ஜடாபாரத்தில் இடது விநாயகரும் வலதில் பைரவரும் வலது புறம் உள்ள துவார பாலகர் நெற்றியில் கஜசம்ஹார மூர்த்தியும் உள்ளனர். ராஜேந்திர சோழர் காலத்தில் கருவறை மைய கட்டுமானம் தூங்கானை மாட கோயிலாக எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கோஷ்டத்தில் உள்ள துர்கை சிற்பம் இதுவரை பார்த்த துர்கை சிற்பங்களில் மிக சிறந்த ஒன்று. குமின் சிரிப்புடன் அமைந்த அன்னை. 63வர் வரிசையில் இறுதியில் நம்பியாண்டார் நம்பி என்று பெயர் போடப்பட்ட பூத கணம் ஒன்றுள்ளது. பிச்சாண்டவர் சிற்பத்தில் உள்ள பிச்சை பாத்திரம் ஏந்திய பூதம் இது. உள்ள  இங்குள்ள வட்டப்பாறை அம்மன் சென்ற நூற்றாண்டு வரை பலி ஏற்றுகொண்டிருந்திருக்கிறாள். 


துவாரபாலகர் - படம்பக்க நாதர் சன்னிதி மகாமண்டபம்


நடராஜர் சாந்திக்கு முன் கம்பீரமான மழு ஏந்திய பல்லவர் கால சண்டிகேஸ்வரர் சிற்பம் உள்ளது.


திருவாரூரில் உள்ள பைரவர் போன்றே அமைப்புடைய பைரவர் சிற்பம் இங்குள்ளது. முழுதும் பொன்னால் போர்த்தப்பட்டிருந்தார். சமீபத்தில் புனரமைக்கப்பட்ட ஒற்றீசர் சன்னிதி கோயிலின் வட மேற்கில் உள்ளது. ஓதுவார் மூர்த்திகள் ஒவ்வொரு சந்நிதியாக சென்று பதிகம் பாடிக்கொண்டிருந்தார். கம்பீரமான குரல். திருத்தணி சுவாமிநாத ஓதுவாருக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டபின் ஓதுவார் மூர்த்திகளின் பணி மீண்டும் கவனிக்கப் படுகிறது. சற்குருநாத ஓதுவார் இப்போது கபாலியை போன்று இப்போது மயிலையின் அடையாளம். சென்ற மாதம் சென்னை சென்றிருந்தபோது அவர் பாடுவதை கேட்கவே காலை சீக்கிரம் சென்றிருந்தோம்.  


வடிவுடையம்மன் சன்னிதியில் பிரம்மச்சாரிகளான கேரள போற்றிகள் பூஜை செய்கின்றனர். இது ஆதிசங்கரர் தொடங்கி வைத்த மரபாக சொல்லப்படுகிறது. திரிபங்கத்தில் மின்னும் மூக்குத்தியுடன் வளர்ந்த மீனாட்சி போன்று நின்றிருந்தாள். மீனாள் எப்போதுமே பள்ளி செல்லும் குழந்தை தான். அவளை பேரரசி என்று மனம் ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை. அகிலாவை சொன்னாலும் தகும். 


அம்மன் சந்நிதிக்கு முன் மண்டபத்தில் நவகிரக சாந்திக்கு பின் மண்டபத்தின் சுவரில் ஒரு சிற்பம் இருந்தது. நவகிரகத்தை ஒட்டியிருப்பதால் சனீஸ்வரர் என்று பெயர் பலகை வைத்திருந்தனர். நெடு நேரமாக உற்று பார்த்துக்கொண்டிருந்த அம்மையிடம் இது முருகர் சன்னிதி என்றேன். நடுவயது அண்ணன் ஒருவர் வந்து இது “சனீஸ்வரர் பா” என்றார். “இல்ல னா பாருங்க கீழ இருக்கிறது மயில் மாதிரி இருக்கு மேல சக்தி ஆயுதம் வஜ்ரம் லாம் வச்சுருக்கார் பாருங்க” என்றேன். அவர் “30 வருஷமா இங்க வந்துட்டு இருக்கேன் இது சனீஸ்வரர் தான்” என்றார். 30 ஆண்டுகளாக சனீஸ்வரராக வணங்கிகொண்டிருந்தால் நிச்சயம் குமரன் சனீஸ்வரருக்கு இவ்விடத்தை கையளித்திருக்கவே வாய்ப்பு அதிகம். மண்டபத்தின் வலது புறம் ஒரு சிறிய சன்னிதி இருந்து இடிக்கப்பட்ட சுவடுகள் உள்ளன. அது விநாயகராகவும் இடது புறம் இந்த சன்னிதி முருகராகவும் இருக்கலாம் என்பது எனது ஊகம். 30 ஆண்டுகளாக இருக்கும் நம்பிக்கையை குலைக்க வேண்டாம் என்று வந்துவிட்டேன்.


சென்னை சென்னைப்போல இருந்தது. கொளுத்தும் வெயிலில் ஒரு இளநீர் குடித்துவிட்டு சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றோம். விக்டோரியா ஹால் புதுப்பிக்கப்பட்டதன் பிறகு வெகு நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பார்வையாளர் நேரம் முடிந்து விட்டது என்று மாலை வர சொல்லிவிட்டனர். 

விக்டோரியா அரங்கம்

மாலை 5.10-6.30 வரை இருந்த பிரிவில் பதிவு செய்திருந்தோம். விக்டோரியா அரங்கமும் ரிப்பன் கட்டிடமும் பிரிட்டிஷ் காலத்தின் சாட்சியங்களாக இன்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி நிற்கின்றன. விக்டோரியா அரங்கம் விக்டோரியா மகாராணியின் பொன்விழா ஆண்டில் திறக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டு ஒரு ஆண்டு தாமதமாக 1888ம் ஆண்டில் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்தது. மிகசிறந்த பாரம்பரிய முறையில் 2023ம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. உள்ளே அரங்கம் தொடங்கியதில் இருந்து தற்போது வரையிலான முக்கிய வரலாற்று நிகழ்வுகளை குறித்த புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. பம்மல் சம்மந்த முதலியார் சுகுண விலாச சபாவில் பல நாடகங்களை இங்கு அரங்கேற்றியிருக்கிறார்(இவரது நினைவாக கமல் பம்மல் K சம்மந்தம் படத்திற்கு தலைப்பு வைத்தார் என்பது உபரி trivia). 1926ம் ஆண்டு நாடகம் நடைபெற்ற போது வெளியில் நின்ற கார்கள் ஒரு புகைப்படத்தில் உள்ளன. 1931ம் ஆண்டு பாரதியாரின் உரையை கேட்க ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு அதற்கும் அரங்கு நிரந்த கூட்டம் இருந்ததாக ஒரு செய்தி காண முடிந்தது. சுதந்திர போராட்ட காலகட்டத்தில் முக்கியமான பல நாடகங்களும் அதன் பின் விளையாட்டு போட்டிகளும் என்று தொடர்ந்து செயல்பட்டிருக்கிறது. 


எனக்கு காலனியாதிக்க வரலாறென்பது தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் ஒரு காலகட்டம். மகேந்திரவர்மன் குடைவரைகள் 1400 ஆண்டுகள் தள்ளி இருக்கின்றன எங்கோ இருக்கின்றன காலனியதிக்கத்தின் புறவய காலம் கைக்கெட்டும் தொலைவில் இருக்கிறது. திருச்சி தெப்பக்குளத்தில் உள்ள clive’s house கல்வெட்டு உள்ளே சென்று சந்தித்து விட முடியும் என்ற எண்ணத்தை கொடுப்பது. அரங்கத்தின் முதல் மாடியில் கண்ணாடி வழி சென்ட்ரலுக்கு விரையும் மக்களை பார்த்துக்கொண்டிருந்தேன். பிரமாண்டமான மேடை. பிரிட்டிஷ் பாணி இருக்கைகளும் சரவிளக்கும் தொங்கவிடப்பட்டிருந்தன. எத்தனை முறை சுதந்திர போராட்ட நாடகங்கள் சமூக சீர்த்திருத்த கருத்துக்கள் இந்த அரங்கில் ஒலித்திருக்கும். இன்றும் ஏதோவொரு மூலையில் அப்பெருமக்கள் இவ்வரங்கில் இருப்பர். 


மெரினா - வங்காள விரிகுடா

பௌர்ணமி மாலையென்பதால் கடற்கரைக்கு சென்றிருந்தோம். மெரினா தான் பக்கம். கடல், இயற்கையின் பேரன்னை வடிவம். எல்லா உயிர்களும் இவளிடமிருந்து தோன்றியவர்கள். மலைகள் இயற்கையில் நிலைத்த தன்மையை கொடுப்பவையென்றால் கடல் ஒரு ஒருபோதும் ஓயாத ஒரு நிகழ்வு என்று தோன்றுவதுண்டு. ஒவ்வொரு அலையும் அப்போது நிகழ்வது. அப்போதே மறைந்தும் விடுவது. லட்சம் மக்கள் வந்தாலும் சலிக்காமல் உரையாடுபவள் இவள். கடல் இருக்கும் ஊரில் மக்கள் எப்படி சோகமாக இருக்கிறார்கள் என்றே புரியவில்லை. 


ரயிலில் ஏறியவுடன் சென்னையை முற்றிலும் நினைவடுக்காக தொகுத்து இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும். இந்த இரண்டு நாட்களுக்குள் ஒரு சென்னை வாழ்க்கையை வாழ்ந்து முடித்து திரும்புகிறோம். சமீப காலங்களில் இப்படியான குட்டி குட்டி வாழ்க்கைகள் ஒற்றை பெரு வாழ்க்கையை இன்னும் அர்த்தபடுத்துகின்றன. சென்றமாதம் நெல்லையப்பர், அதற்கு முன் கொடுங்கல்லூர் என்று பல. கன்னிமாரா நூலகமும், முகலிங்கமும், மாணிக்க தியாகரும் மெரினாவில் உண்ட சோளமும் அப்படியே இங்கிருக்க, வெள்ளி மாலை விட்டுவந்த வேலை KSR நிலையத்தில் காத்திருக்கும். 



மனோ 

31 ஜூன் 2026


Comments

  1. ஏழெட்டு வருடங்களுக்கு முன் சென்னை வாழ்வை விட்டு வந்த பிறகு மீண்டும் சென்னை செல்லும் எண்ணமே எழுந்ததில்லை. கன்னிமாரா நூலகத்தின் சந்நிதி, எழும்பூர் அருங்காட்சியகம், ரிப்பன் மாளிகை, கடலன்னை என மீண்டும் அங்கு செல்வதற்கான தூண்டுதலை அளித்துவிட்டீர்கள்

    ReplyDelete
  2. நன்றி அண்ணா 😍🙏🏻

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...