Skip to main content

கண்ணனூர் கோயில்கள் ✨

        நீண்ட விடுமுறைக்கு முதலில் வைத்திருந்த திட்டம் வேறு, இதனை தொடர்ந்து மாற்றிய திட்டத்தையும் மாற்றி இன்று திருச்சி பள்ளிவிடைக்கு அருகில் உள்ள V துறையூரில் உள்ள கோயில்களுக்கு சென்று வந்தேன். 

வாலீஸ்வரர் கோயில்

        மூன்று மாதத்திற்கு முன் கண்ணனூர் போசளீஸ்வரம் மற்றும் முக்தீஸ்வரம் கோயிலுக்கு சென்றிருந்தபோது கையில் ஆய்வாளர், ராசமாணிக்கனார் ஆய்வு மைய நிறுவனர், கலைக்கோவன் புத்தகம், வெயிலுக்கு தொப்பி, பேனா சகிதமாக சென்றதும் தொல்லியல் துறையிலிருந்து வந்திருப்பதாக நினைத்து இப்போது கோயில் வேலைகள் நடக்கின்றன அதனால் இப்படி உள்ளது என்று குவிந்திருந்த கற்களை காமித்து சொன்னார்கள்.


        முக்தீஸ்வரர் கோயிலை பார்த்து முடித்து கிளம்பும்போது வாலீஸ்வரர் சோழீஸ்வரர் என்று அருகில் இரண்டு கோயில்கள் உள்ளன என்றனர். அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவு இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டேன்.


        இன்றொரு நாள் கிடைத்ததால் காலையே கிளம்பி பள்ளிவிடை பேருந்து நிலையம் சென்று விட்டேன். அங்கிருந்து மூன்றரை கிலோமீட்டர் உள்ள செல்லவேண்டும். நடந்து சென்றுகொண்டிருக்கும்போதே ஒரு Bro lift கொடுத்து V துறையூர் மதுர காளியம்மன் கோயில் வரை இறக்கிவிட்டார். வெளியிலிருந்து பார்த்த போது கண்டத்தில் உள்ள நடன சிற்பங்கள் தெரிந்தன, சோழர் காலத்திய கோயில் என்று நினைத்து உள்ள சென்றேன். வடக்கு நோக்கிய காவல் தெய்வமான தாய். மகாமண்டபம், அர்த்தமண்டம் கருவறை கற்றளி, பிற்காலத்தில் Bathroom Tiles கொண்டு (நாகசாமியின் பதம்) முகமண்டபம் எழுப்பியிருக்கிறார்கள். கோயிலுக்கு முன் கருப்பசாமி, மதுரைவீரன் போன்ற காவல் தெய்வங்களின் சந்நிதிகள். தேவிக்கு பச்சை நிற பாவாடை அணிவித்திருந்தனர் சிற்பம் முழுவதையும் பார்க்க முடியவில்லை.


மதுர காளியம்மன் கோயில் கல்வெட்டு 


கோயில் Maps location -  மதுர காளியம்மன் கோயில்


        கருவறையின் மேற்கு சுவரில் ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் என்ற கல்வெட்டு உள்ளது. ராஜ(ராஜ ராஜ என்று இருந்திருக்கலாம் சிதைந்துள்ளது) வளநாட்டு துறையூர் என்று ஊர்பெயரும் திருநாமத்துகாணி என்று சில வார்த்தைகள் மட்டும் படிக்க முடிந்தது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைய கல்வெட்டு. அதிஷ்டான கண்டத்தில் உள்ள நடன சிற்பங்கள் சிறப்பானவை. ஆடல்வல்லானின் தாண்டவத்தை போன்ற நிலையில் உள்ள ஒரு ஆடல் மகளிர் சிற்பம் சிறப்பானது.


        நான் பார்க்க வந்த கோயில்கள் பட்டியலில் இந்த கோயில் இல்லை. ஆனாலும் சிற்பங்கள் கல்வெட்டுக்கள் நிறைந்திருந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கோயிலை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


        கோயிலிலிருந்து 500 மீட்டர் தொலைவில் வாலீஸ்வரர் கோயில். இதுவும் கைவிடப்பட்டு சிதிலமடைந்துள்ளது. கற்றளியிலிருந்து பிற்காலத்தில் சுதையால் எடுத்து கட்டியுள்ளனர் அந்த சுதை கட்டுமானமும்  சிதைந்துள்ளது. தெற்கில் நுழைவாயிலுடன் கூடிய கிழக்கு நோக்கிய கோயில். முகமண்டபம் அர்த்தமண்டபம் மகா மண்டபம் அந்தராளம் கருவறை என்ற அமைப்பை கொண்டுள்ளது. அர்ச்சகர், அவரது சிறிய பையனைத்தவிர இன்று வந்திருந்த ஒரே பக்தகோடிகள் நான் தான். உற்சவராக ஒரு விரல் அளவிற்கு செம்பினாலான லிங்கம் வைத்திருந்தார். 



வாலீஸ்வரர் கோயில் கல்வெட்டு 

        அந்த லிங்கத்திருமேனியில் தொடங்கி, கருவறையில் உள்ள லிங்கம், மகாமண்டபத்தில் உள்ள கம்பீரமான லிங்கம் மற்றும் அம்மையின் நின்ற சிற்பம், தூணில் உள்ள வாலி சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் குறுஞ்சிற்பம், கோஷ்டத்தில் உள்ள விநாயகர் மற்றும் தக்ஷிணாமூர்த்தி ஓவியங்கள் மேற்கு கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு, தெற்கு நோக்கிய தனி  சந்நிதியில் உள்ள சண்டிகேஸ்வரர், வேப்பமரத்தடியில் உள்ள நாகர் சிற்பங்கள், பின் மகாமண்டபத்தில் உள்ள சண்முகர், விநாயகர் சமபாத ஸ்தனகத்தில் உள்ள  விஷ்ணு, வெளியில் ரிஷபகோட்டிலில் உள்ள ரிஷபம் (நந்தி அல்ல ரிஷபம்) பலிபீடம், பின் மகாமண்டபத்தில் உள்ள பைரவர் என்று முறையில் எல்லா தெய்வங்களுக்கும் நெய்வேதியமும் கற்பூரமும் காண்பித்தார். ஸ்பீக்கரில் திருவாசகம் ஓடிக்கொண்டிருந்தது சரியாக  திருப்பொன்னுசல் வரும்போது நித்யபூஜை முடிவடைந்தது. சுற்றியும் பரிவார தெய்வங்களுக்கு என்று தனித்த சந்நிதிகள் இருந்துள்ளன. அவற்றிற்கான கட்டுமான உறுப்புகளும் அலங்காரமாக இருக்கின்றன. 


பிரகாரத்தில் உள்ள மூத்தோள் சிற்பம் 

        தெற்கு கோஷ்டத்தில் ஒரு பெரிய ஜேஷ்டையின் சிற்பம், அடியவரின் சிற்பம், தேவியின் சிற்பம், தலை சிதைந்த ஆளுடைய பிள்ளையின் சிற்பமும் உள்ளது (முகம் இல்லாத நிலையில், இரு கைகளிலும் உள்ள தாளம் மற்றும் சிற்றாடை கொண்டு சம்பந்த பெருமான் என்று ஊகிக்கிறேன்) வைக்கப்பட்டுள்ளன.


திருமால் 

        பிரசாதமாக ஒரு சாத்துக்குடியும் பின் கிளம்பும்போது இன்னொரு சாத்துக்குடியும் கொடுத்தார். மகாமண்டபத்தில் வெளிப்புற சுவர் முழுவதும் மிக நீண்ட கல்வெட்டு உள்ளது. பெரும்பாலான பகுதிகள் சுண்ணாம்படிக்கபட்டுள்ளது, துயரை பகிர்ந்து கொள்ள நண்பர் லால்குடி தினேஷிற்கு புகைப்படம் எடுத்து அனுப்பினேன், கொஞ்சம் படிக்க கூடிய நிலையில் உள்ள கல்வெட்டுகளின் கடந்த நூறாண்டுகளுக்குள் சிதைக்கப்படுவதை நாங்கள் காண்பது இது முதல் முறையல்ல. எண்ணற்ற கோயில்களில் பார்த்திருக்கிறோம். 


        ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ராஜ ராஜ  என தொடங்கும் கல்வெட்டு இரண்டாவது வரியில் ராஜ ராஜ வளநாட்டு பாச்சில் கூற்றத்து துறையூர் என்றிருந்ததையும், உடையார் வாலீஸ்வரமுடைய நாயனார் என்ற வரியும் உள்ளது என்று படித்து காண்பித்தேன். அவர் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. யாரிடமாவது சொல்லி இந்த கோயிலை publicise பன்ன முடியுமா உழவார பணி செய்கிறோம் ஆனால் கோயிலை புனரமைப்பதற்கு உதவி தேவை என்றார். என் நண்பர் வட்டாரத்தில் பகிர்கிறேன் என்று சொல்லிவந்தேன். உடைய நம்பி உய்யக்கொண்ட நாயக எழுத்து என்ற சிலவற்றை படிக்க முடிகிறது. நாளை சிவன் ராத்திரியை முன்னிட்டு உழவாரப்பணி, திருவாசக முற்றோதல் இருப்பதால் நாளையும் தவறாமல் வரவேண்டுமென்று வேண்டிக்கொண்டார். 


பரிவார ஆலய அதிஷ்டானம் 

        மகாமண்டபத்தில் பைரவராக வணங்கப்படும் சிற்பத்தை காண்பித்து இது பைரவர் னு ஒரு ஸ்தபதி சொன்னாரு சரிதானானு உங்களுக்கு தெரிஞ்சா பார்த்து சொல்லுங்க என்றார். சிற்பம் பெரிதும் சிதைந்திருந்தது, பின்னிரு கரங்கள் சங்கு சக்கரம் போல் இருந்ததால் பெருமாளாக இருக்கலாம் என்றேன். நானும் அப்படிதான் நினைக்கிறேன் என்றார். 


        மகாமண்டபத்தில் உள்ள விஷ்ணு பிரம்மாண்டமான சிற்பம் 5 அடிக்கு மேல் இருக்கும் சமபாத ஸ்தானகத்தில் ஆழியும் வெண்சங்கும் வலது முன்கையில் அபய ஹஸ்தமாக வைத்திருந்தார். இடது முன் கை பார்க்க முடியவில்லை வேஷ்டிக்குள் வைத்திருந்தார். அவரிடம் கேட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன், நாளை அபிஷேகம் நடக்கும் அப்போது வந்து முழு உருவத்தையும் பார்த்துக்கோங்க என்றார். எது எந்த கால சிற்பம் என்று தெரிகிறதா என்றார். சோழர் காலத்தைய சிற்பம் என்று சொல்லி தெரிந்த வரையில் விளக்கினேன். அவரே சோழீஸ்வரர் கோயிலின் வழியையும் சொல்லி அங்கு எந்த வீட்டில் சாவி வாங்கவேண்டுமென்று சொல்லி அனுப்பினார். நெலவாசல்லயும் கல்வெட்டு இருக்கு அதையும் பார்த்துட்டு போங்க முடிஞ்சா எழுதிக்குடுங்க இங்க போர்டு வைப்போம் என்றார். நுழைவாயில் சுவரில் உள்ள கல்வெட்டு முற்றும் சிதைந்துள்ளது சில எழுத்துக்கள் கூட படிக்க முடியவில்லை. சோழர் கால எழுத்தமைதி.


கோயில் Maps location  - வாலீஸ்வரர் கோயில்


        அங்கிருந்து 100 மீட்டருக்குள் தான் சோழீஸ்வரர் கோயில். கோயிலுக்கு முன் ஒரு மண்டபத்தில் 20 வடக்கு நண்பர்கள் தங்கியிருக்கிறார்கள். கட்டிட வேலைக்கு வந்தவர்கள் வாசலில் சமைத்துக்கொண்டிருந்தனர். தலையாரி வீட்டிற்கு பக்கத்து வீட்டில் சாவி கேட்டேன் அந்த வாசலில் இருப்பதை எடுத்துகொடுத்து வரும்போது அங்கு மாட்டிட்டு போங்க என்றார்.


        கோரமாக சிதிலமடைந்துள்ள கோயில் இஸ்லாமிய படையெடுப்பில் சிதிலமடைந்திருக்காலம் என்பது எனது ஊகம். நண்பர்களிடம் சரிபார்க்க வேண்டும். கோயிலில் உள்ள சிற்பங்கள் கற்கள் அந்த பகுதி முழுதும் சிதறிக்கிடக்கிறது. மூன்றாம் ராஜ ராஜனுக்கு உதவ வந்த ஹோய்சாள அரசர் வீர நரசிம்மர் சமயபுரம் கண்ணனூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்துவந்தார். அவரது மகன் வீர சோமேஸ்வரரும் அவரது மகன் வீர ராமநாதனும் கண்ணனூரிலிருந்து ஆட்சி செய்து வந்தனர். கண்ணனூர் போசளீஸ்வரம், திருவானைக்கா  போன்ற பல கோயில்களில் உள்ள கல்வெட்டுக்களில் இந்த செய்திகள் உள்ளன.  வாலீஸ்வரத்தில் கல்வெட்டு இருக்கிறது இங்கு ஏதும் இல்லை கட்டுமான அமைப்பைக்கொண்டு ஹோய்சாளர் காலத்திலோ அல்லது பிற்கால சோழர் காலத்திலோ இந்த இரண்டு கோயில்களும் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.


கோயில் Maps location  - சோழீஸ்வரர் கோயில்



சோழீஸ்வரர் கோயில் 

சோழீஸ்வரர் கோயில் ரிஷபம் 

        அலங்காரமான நுழைவாயில், முகமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது, கிழக்கு நோக்கிய கோயில். சிவன் சந்நிதிக்கு நேராக நுழைவது ஆணவத்தை குறிக்கும் என்பதால் சந்நிதியின் இரு புறமும் வாயில் வைக்கும் மரபு சோழர் காலத்தில் இருந்தது. தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் என்று பெருங்கோயில்களையும் பல சிறு jewel போன்ற கோயில்களையும்(ஜெ வின் சொல்) உதாரணமாக சொல்லலாம். 


        சந்நிதிக்கு முன் உள்ள இரண்டு ரிஷபங்களில் முன்னுள்ள ஒன்று புதியது. அங்கு தூங்கிக்கொண்டிருந்த வடக்கர் அது புத்சு ப்ரோ என்றார். உதவிக்கு நன்றி. பின்னால் உள்ள ரிஷபம் பழங்காலத்தயது, Original structureல் இருந்திருக்கலாம். இவை தவிர இன்னும் 2 ரிஷப சிற்பங்கள் உள்ளன. முகமண்டபத்திற்கு முன் நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு வந்திருக்கும் பாட்டிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் நித்திரை களையாதபடிக்கு கதவை துறந்து உள்ளே சென்றேன். தெற்கு நோக்கிய அம்மன் சன்னிதி உள்ளது. அம்மன் மேலிரு கரங்களில் அக்ஷமாலையும், தாமரையும் முன்னிரு கரங்கள் அபய, வரத ஹஸ்தமாகவும் அமைந்து நின்றிருந்தாள். விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் வைத்து கும்பிட்ட விநாயகரை கரைக்க மனமில்லாமல் யாரோ இங்கு வந்து வைத்திருக்கின்றனர். மகா மண்டபத்தில் ஆறு முகங்கள் பன்னிரு கரங்களுடன் சண்முகர், உழவார படையுடன் அப்பர் மற்றும் நாகர் சிற்பங்கள் உள்ளன.


சோழீஸ்வரர் கோயில் துவாரபாலகர்  

        இங்கு வருவதற்கு முடிவெடுத்தற்கு முக்கிய காரணம் இங்குள்ள Mapல் பார்த்த துவாரபாலகர்கள். நிச்சயமாக சோழர் காலத்தைய சிற்பங்கள். இடப்புறம் உள்ள துவாரபாலகர் இடக்கை, இடக்காலை மழுவின் மீதி இருத்தி வலகரத்தில் விஸ்மய ஹஸ்தமும் கொண்டிருக்கிறார். வலப்புரம் உள்ள துவாரபாலகர் வலக்கால் மற்றும் இடக்கையை மழுவின் மீதிருத்தி சூசி ஹஸ்தமும் கொண்டிருக்கிறார். கருவறையில் அனாதியான லிங்க வடிவம். ஒற்றை விளக்கு வெளிச்சத்தில் அகாலத்தில் யோகத்தில் அமர்ந்திருந்தார். வெளி பிரகாரத்தில் எந்த கல்வெட்டையும் காண முடியவில்லை. கருவறையின் தெற்கில் தட்சிணமூர்த்தி கோஷ்டம் இருந்துள்ளது. கோஷ்டத்திற்கு வெளியில் உள்ள சுவரில் நான்கு சனகாதி முனிவர்கள் புடைப்பு சிற்பம் உள்ளது. வடக்கு திசையில் உள்ள துர்கை சிற்பம் கோஷ்டத்தில் இருந்து பின் வெளியில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. சாவியை சொன்னபடி வீட்டிற்கு முன்னுள்ள கொண்டியில் மாட்டிவிட்டு புறப்பட்டேன்.


சோழீஸ்வரர் கோயில் துவாரபாலகர்

        கோயிலுக்கு வெளியில் தனி கோயிலில் துர்கை சிற்பத்தை மட்டும் வைத்து வணங்குகின்றனர் அம்மை பின் வலது இடது கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தி சமபாத ஸ்தனகத்தில் நிற்கிறாள். வரும் வழியில் வயல் வரப்பை ஒட்டி கைவிடப்பட்ட மற்றொரு சிறிய கோயில் இருந்தது. கோமுகம் இருப்பதை கொண்டு கருவறை என்று ஊகிக்க முடிகிறது. அருகில் தெய்வ திருமேனியெதும் இல்லை.

அருகில் உள்ள நியாய விலை கடை வாசலில் ஒரு எல்லைக்கல் உள்ளது. மேல் பாதியில் சக்கரமும் இரு புறமும் விளக்கும் பொறிக்கப்பட்டு  கீழே எழுத்துக்கள் உள்ளன. சில எழுத்துகளை தவிர மற்றவற்றை படிக்க முடியவில்லை.


எல்லைக்கல் 

எல்லைக்கல் Maps link  - எல்லைக்கல் 


        பள்ளிவிடை பேருந்து நிலையம் நடந்து வரும் வழியில் ஈஞ்சூர் சிவன் கோயில் என்று mapல் ஒரு கோயில் இருந்தது அதையும் பார்க்க சென்றேன். இதுவும் சோழர் கால கட்டுமான கலையை ஒத்திருந்த கோயில். சிவன் கோயில் அர்த்தமண்டபம் மற்றும் கருவறை அமைப்பை கொண்டிருக்கிறது. கோஷ்டங்களில் சிற்பங்கள் இல்லை. இருந்து பின்னாளில் அகற்றப்பட்டிருக்கலாம். கோயிலுக்கு உள்ளே ஒரு விஷ்ணு சிற்பம், 3 விநாயகர் சிற்பங்கள் இருந்தன . 


        கோயிலுக்கு முன் மற்றுமொரு சிறிய கோயில் அதன் நுழைவாயிலில் இடப்புறம் ஒரு மன்னனின் சிற்பம் என்று எண்ணத்தக்க அலங்காரமாக ஒரு சிற்பமும் வலப்புரம் வணங்கும் நிலையில் குரங்கு சிற்பமும் உள்ளது. மழை தொடங்கவே அந்த கோயிலுக்கு ஒடுங்கி நின்றுகொண்டேன். ஒரு அக்கா ஏன்பா எப்போ இடிஞ்சு விழும் னு தெரியல அங்க போய் நிக்கிற என்றார். கருணைக்கு நன்றி. பின்னர் அருகில் உள்ள சில நவயுக நவகிரக சிலைகளையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். 


        வழியில் பார்த்த ஒரு பாட்டி எனது புராணத்தை கேட்டு நான் பொறந்ததுல இருந்து இங்க தான் இருக்கேன் எனக்கே தெரியாம இங்க சிவன் கோயில் இருக்கா என்று கேட்டார். Quite Natural என்று நினத்துக்கொண்டேன். எதிரில் உள்ள விநாயகர் கோயிலில் ஏழன்னையரில் ஒரு வாராகி சிற்பம் தலை மட்டும் உள்ள நிலையில் இருந்தது. மற்றவர்கள் எங்கு புதையுண்டு இருக்கிறார்களோ. 


        இன்று பார்த்த கோயில்களை பற்றிய எந்த ஆவணமும் இணையத்திலும் புத்தகங்களிலும் கிடைக்கவில்லை. நண்பர்கள் யாரேனும் கண்டால் பகிர்ந்து உதவவும்.


        திரும்பும் நேரத்தில் நல்ல மழை. Lift கேட்பதற்கு கூட யாரும் வரவில்லை. 3 கிலோமீட்டர் நடந்து பேருந்து நிலையத்தை அடைந்து வீடு வந்து சேர்ந்தேன். பார்த்த ஒவ்வொரு கோயிலை பற்றியும் விரிவாக கட்டுரை அல்லது தமிழ் விக்கி பதிவு எழுதயிருக்கிறேன். மற்றுமொரு நிறைவான நாள். தன்னறத்தில் திளைத்தல். இயல்பு எதுவோ அதனில் அமைதல். திருவருள்.


மனோ 

24-01-2026

திருச்சி 

Comments

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...