Skip to main content

ஜெ எனும் பிரஜாபதி ✨


இந்திய புராண மரபில் பிரஜாபதி என்பவன் தன்னில் இருந்து தன்னை போல பிரஜாபதிகளை உருவாக்குபவர். பெருந்தந்தை. காந்தி தன்னைப்போல பல காந்திகளை உருவாக்கியதால் அவர் பிரஜாபதி. ஜெ ஒரு பிரஜாபதி. புனைவெழுத்தாளர்கள், அபுனைவு எழுத்தாளர்கள், களசெயல்பாட்டார்களென நூற்றுகணக்கானோரை உருவாக்கியவர். 


இன்று ஆசான் ஜெயமோகனின் பிறந்தநாள். ஆசான் என்று சொல்வதில் ஜெ க்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். காந்தி இறுதி வரை தன்னை மகாத்மா என்று அழைப்பதை கண்டித்துக் கொண்டுதான் இருந்தார். 6 மாதத்திற்கு முன் நண்பன் ஒருவனுக்கு அறம் கதையை அனுப்பி ஜெ வை அறிமுகம் செய்தபோது இவரு சங்கி னு சொல்றாங்களே என்றான். ஒருவரி கூட அவர் எழுதியதை படித்ததில்லை. எத்தனை எளிய உயிர் என்று தான் தோன்றியது. இது போன்ற எண்ணற்ற எறும்புகளையும் ஈசல்களையும் பெருங்கருணையுடன் குனிந்து பார்க்கும் மலை சிகரம் என நின்றிருக்கும் ஒரு பெரும் கலைஞன், ஜெ.


முழுமை அறிவு காணொளிகள் ஒன்றில் உங்கள் கொள்ளுபேரன் கொள்ளு பேத்தி காலத்தில் தமிழகம் நினைவில் வைத்திருக்கும் என்று சொல்லியிருப்பார். அதை கேட்டபோது பெரும் சிலிர்புணர்வை அடைந்தேன். இந்த கர்வம் ஒவ்வொரு நாளும் தவமென 40 ஆண்டுகள் அவர் உழைத்து ஈட்டியது.


All great men are institution builders. உலகின் மிக நீண்ட நாவல்கள் நிரைகளுள் ஒன்றான வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம் போன்ற பித்தெழும் நாவல்கள் நூற்றுக்கணக்கான சிறுகதைகள், மதிப்புரைகள், விமர்சனங்கள் என்று இலக்கிய சாதனைகளுக்கு வெளியிலும் செயல்களாக, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கி மூத்த படைப்பாளிகளுக்கு விருதளிப்பது, பல்வேறு இலக்கிய கூட்டங்களை ஒருங்கிணைப்பது. தமிழ் விக்கி என்ற இணைய கலை களஞ்சியத்தை உருவாக்கியது. முழுமை அறிவு மூலம் நித்யவனத்தில் ஒவ்வொரு  வாரமும் தத்துவ, கலை, இலக்கிய வகுப்புகளை ஒருங்கிணைப்பது. இந்த மாதம் நியூயார்க்கில் வாழும் தமிழ் இலக்கிய விழாவை நிகழ்த்தியது என்று ஒரு பெருஞ்செயலில் இருந்து மற்றொரு பெரும் செயலுக்கு என்று நிகழ்ந்து கொண்டே இருக்கும் பேரிருப்பு.


கொரோனா காலகட்டத்தில் தான் ஜெ எனக்கு அறிமுகம். பள்ளி நாட்களில் இருந்தே திருவானைக்கோவில் கிளை நூலத்திற்கு செல்லும் வழக்கம் உண்டென்றாலும் அப்போது படித்தவை அந்த பருவத்திற்குரிய நூல்கள். தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள். பொன்னியின் செல்வன் படித்து அந்த திளைப்பில் இருந்தபோது அதை குறித்த ஜெ வின் ஒரு உரையாடலின் மூலம் தான் அவரை வாசிக்க தொடங்கினேன். நன்றாக படித்து வேலைக்கு சென்று குடும்பத்திற்காக உழைத்து இந்த ஒரு protein structure இருந்ததற்கான எந்த ஒரு தடயமும் இன்றி மறித்திருக்க வேண்டியவன். அது செய்தே ஆக வேண்டியது அதையும் கடந்து எனக்கென்று ஒரு வாழ்க்கை, ஒரு கனவு, அதை நிகழ்த்திக்கொள்ளும் வாழ்க்கை அமைய முடியும் என்று முதலில் ஆற்றுப்படுத்தியவர் ஜெ. ஒவ்வொரு கணமும் வாசிப்பு எழுத்து பயணம் என்று பெருங்கனவுகளில் திளைக்கிறேன். அதற்கென ஏற்ற சுற்றமும் நல்லூழால் அமைத்நிருக்கிறது. நாளும் துளியென அந்த கனவுகளை நிகழ்த்திக்கொண்டும் இருக்கிறேன். பொழுது போக்குவதற்கென்று ஒரு சிறுமையையும் செய்ததில்லை. வாழ்வு இன்னும் பெருதாகியிருக்கிறது. இந்த யுகத்தில் இருக்கும் கேளிக்கை, சமூக ஊடக அழுத்தம் என்ற இந்த காற்றிற்குள் எனகே எனக்கென துளி வெளிச்சத்தை அணையாது காத்துகொண்டிருக்கிறேன்.


2024 குருபூர்ணிமா அன்று நித்யவனத்தில் வெண்முரசு கேள்வி பதிலில் வெண்முகில் நகரம் பரிசாக பெற்றேன். அது ஒரு ஆசி.பல முறை ஜெ என் கனவில் வந்ததுண்டு. தத்துவ வகுப்பில் ஒருமுறை நடை செல்லும் பொது ஜெ நீங்க என் கனவுல வந்துருகீங்க உங்ககூட ஸ்ரீரங்கம் கோயிலுக்கெல்லாம் போயிருக்கேன் என்றேன். ஓ என்று தலை அசைத்துவிட்டு மறுநொடி “ஆனா கனவுல சொல்றதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல செரியா” என்றார் சில நிமிடங்களில் உபநிடதம் குறித்த வகுப்பு தொடங்கிவிட்டது. இந்த இருமை எப்போதும் அவருக்கு கைவரக்கூடியதாக இருக்கிறது. 


என்னைப்போல ஜெ வை படித்த பின் மொத்த வாழ்க்கையும் அர்த்தப்படுத்திக்கொண்ட நூற்றுகணக்கான நண்பர்களை எனக்கு தெரியும். ஒரு மனிதனின் கருத்தின் மீது நமக்கு உடன்பாடு இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் அதை மீறி எவனும் மறுக்கவியாலத செயல்களை செய்வதன் பொருட்டு ஏற்பு மறுபென்ற சட்டகத்தை அறுத்தெரிபவனையே வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளும். இம்மண் பொன்னியென ஒவ்வொரு நாளும் நினைவில் வைத்திருக்கும் மாமனிதன், பெருங்கலைஞன் ஜெ. 


இன்றைய தினம் அவருக்கு தனியாக முக்கியத்துவம் ஏதும் பெறாத நாளாக இருக்கலாம். ஒவ்வொரு நாளுமென குருவின் பாதங்களை சென்னி சூடும் எனக்கு முக்கியமான நாள்.


எம் யாவர்க்கும் ஒளி காட்டும் வாள்விண்மீன் வாழிய பல்லாண்டே !

Comments

  1. உணர்வுபூர்வமான நல்ல பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...