இந்திய புராண மரபில் பிரஜாபதி என்பவன் தன்னில் இருந்து தன்னை போல பிரஜாபதிகளை உருவாக்குபவர். பெருந்தந்தை. காந்தி தன்னைப்போல பல காந்திகளை உருவாக்கியதால் அவர் பிரஜாபதி. ஜெ ஒரு பிரஜாபதி. புனைவெழுத்தாளர்கள், அபுனைவு எழுத்தாளர்கள், களசெயல்பாட்டார்களென நூற்றுகணக்கானோரை உருவாக்கியவர்.
இன்று ஆசான் ஜெயமோகனின் பிறந்தநாள். ஆசான் என்று சொல்வதில் ஜெ க்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். காந்தி இறுதி வரை தன்னை மகாத்மா என்று அழைப்பதை கண்டித்துக் கொண்டுதான் இருந்தார். 6 மாதத்திற்கு முன் நண்பன் ஒருவனுக்கு அறம் கதையை அனுப்பி ஜெ வை அறிமுகம் செய்தபோது இவரு சங்கி னு சொல்றாங்களே என்றான். ஒருவரி கூட அவர் எழுதியதை படித்ததில்லை. எத்தனை எளிய உயிர் என்று தான் தோன்றியது. இது போன்ற எண்ணற்ற எறும்புகளையும் ஈசல்களையும் பெருங்கருணையுடன் குனிந்து பார்க்கும் மலை சிகரம் என நின்றிருக்கும் ஒரு பெரும் கலைஞன், ஜெ.
முழுமை அறிவு காணொளிகள் ஒன்றில் உங்கள் கொள்ளுபேரன் கொள்ளு பேத்தி காலத்தில் தமிழகம் நினைவில் வைத்திருக்கும் என்று சொல்லியிருப்பார். அதை கேட்டபோது பெரும் சிலிர்புணர்வை அடைந்தேன். இந்த கர்வம் ஒவ்வொரு நாளும் தவமென 40 ஆண்டுகள் அவர் உழைத்து ஈட்டியது.
All great men are institution builders. உலகின் மிக நீண்ட நாவல்கள் நிரைகளுள் ஒன்றான வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம் போன்ற பித்தெழும் நாவல்கள் நூற்றுக்கணக்கான சிறுகதைகள், மதிப்புரைகள், விமர்சனங்கள் என்று இலக்கிய சாதனைகளுக்கு வெளியிலும் செயல்களாக, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கி மூத்த படைப்பாளிகளுக்கு விருதளிப்பது, பல்வேறு இலக்கிய கூட்டங்களை ஒருங்கிணைப்பது. தமிழ் விக்கி என்ற இணைய கலை களஞ்சியத்தை உருவாக்கியது. முழுமை அறிவு மூலம் நித்யவனத்தில் ஒவ்வொரு வாரமும் தத்துவ, கலை, இலக்கிய வகுப்புகளை ஒருங்கிணைப்பது. இந்த மாதம் நியூயார்க்கில் வாழும் தமிழ் இலக்கிய விழாவை நிகழ்த்தியது என்று ஒரு பெருஞ்செயலில் இருந்து மற்றொரு பெரும் செயலுக்கு என்று நிகழ்ந்து கொண்டே இருக்கும் பேரிருப்பு.
கொரோனா காலகட்டத்தில் தான் ஜெ எனக்கு அறிமுகம். பள்ளி நாட்களில் இருந்தே திருவானைக்கோவில் கிளை நூலத்திற்கு செல்லும் வழக்கம் உண்டென்றாலும் அப்போது படித்தவை அந்த பருவத்திற்குரிய நூல்கள். தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள். பொன்னியின் செல்வன் படித்து அந்த திளைப்பில் இருந்தபோது அதை குறித்த ஜெ வின் ஒரு உரையாடலின் மூலம் தான் அவரை வாசிக்க தொடங்கினேன். நன்றாக படித்து வேலைக்கு சென்று குடும்பத்திற்காக உழைத்து இந்த ஒரு protein structure இருந்ததற்கான எந்த ஒரு தடயமும் இன்றி மறித்திருக்க வேண்டியவன். அது செய்தே ஆக வேண்டியது அதையும் கடந்து எனக்கென்று ஒரு வாழ்க்கை, ஒரு கனவு, அதை நிகழ்த்திக்கொள்ளும் வாழ்க்கை அமைய முடியும் என்று முதலில் ஆற்றுப்படுத்தியவர் ஜெ. ஒவ்வொரு கணமும் வாசிப்பு எழுத்து பயணம் என்று பெருங்கனவுகளில் திளைக்கிறேன். அதற்கென ஏற்ற சுற்றமும் நல்லூழால் அமைத்நிருக்கிறது. நாளும் துளியென அந்த கனவுகளை நிகழ்த்திக்கொண்டும் இருக்கிறேன். பொழுது போக்குவதற்கென்று ஒரு சிறுமையையும் செய்ததில்லை. வாழ்வு இன்னும் பெருதாகியிருக்கிறது. இந்த யுகத்தில் இருக்கும் கேளிக்கை, சமூக ஊடக அழுத்தம் என்ற இந்த காற்றிற்குள் எனகே எனக்கென துளி வெளிச்சத்தை அணையாது காத்துகொண்டிருக்கிறேன்.
2024 குருபூர்ணிமா அன்று நித்யவனத்தில் வெண்முரசு கேள்வி பதிலில் வெண்முகில் நகரம் பரிசாக பெற்றேன். அது ஒரு ஆசி.பல முறை ஜெ என் கனவில் வந்ததுண்டு. தத்துவ வகுப்பில் ஒருமுறை நடை செல்லும் பொது ஜெ நீங்க என் கனவுல வந்துருகீங்க உங்ககூட ஸ்ரீரங்கம் கோயிலுக்கெல்லாம் போயிருக்கேன் என்றேன். ஓ என்று தலை அசைத்துவிட்டு மறுநொடி “ஆனா கனவுல சொல்றதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல செரியா” என்றார் சில நிமிடங்களில் உபநிடதம் குறித்த வகுப்பு தொடங்கிவிட்டது. இந்த இருமை எப்போதும் அவருக்கு கைவரக்கூடியதாக இருக்கிறது.
என்னைப்போல ஜெ வை படித்த பின் மொத்த வாழ்க்கையும் அர்த்தப்படுத்திக்கொண்ட நூற்றுகணக்கான நண்பர்களை எனக்கு தெரியும். ஒரு மனிதனின் கருத்தின் மீது நமக்கு உடன்பாடு இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் அதை மீறி எவனும் மறுக்கவியாலத செயல்களை செய்வதன் பொருட்டு ஏற்பு மறுபென்ற சட்டகத்தை அறுத்தெரிபவனையே வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளும். இம்மண் பொன்னியென ஒவ்வொரு நாளும் நினைவில் வைத்திருக்கும் மாமனிதன், பெருங்கலைஞன் ஜெ.
இன்றைய தினம் அவருக்கு தனியாக முக்கியத்துவம் ஏதும் பெறாத நாளாக இருக்கலாம். ஒவ்வொரு நாளுமென குருவின் பாதங்களை சென்னி சூடும் எனக்கு முக்கியமான நாள்.
எம் யாவர்க்கும் ஒளி காட்டும் வாள்விண்மீன் வாழிய பல்லாண்டே !
உணர்வுபூர்வமான நல்ல பதிவு
ReplyDelete