பொய்யிலி மாலை - R நாகசாமி நூல் குறிப்பு
மங்கை வீர ராகவன் அவர்களின் தமிழகத்தில் லகுலீச பாசுபதம் புத்தகத்தின் முன்னுரையில் “தமிழ் சைவ மரபின் மூவர் தேவாரங்களை பாசுபத நெறியில் விளக்கும் பொய்யிலிமாலை எனும் நூல் அளித்த R நாகசாமி அவர்களின் முன்னுரைக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருந்தனர். Kindle Unlimitedல் நூல் கிடைக்க படிக்க தொடங்கினேன்.
R நாகசாமி, தமிழக தொல்லியல் துறையின் முதல் நிறுவனர் இயக்குனர். முதுகலை தமிழ் படித்த மாணவர்களை ஓராண்டு கல்வெட்டு பட்டய படிப்பும் தொல்லியல் துறையில் பணி ஆணையும் வழங்கியவர். வேதாசலம், குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற சமகால முக்கியமான ஆய்வாளர்கள் பலருக்கு ஆசிரியராக இருந்தவர். தொல்லியல், கல்வெட்டு, திருமுறை ஆய்வில் பிதாமகர் என்று கருதப்படும் ஆய்வாளர். அவரது தொடக்க கால நூல்களுள் ஒன்று பொய்யிலி மாலை. பிற்காலத்தில் அவரது நூல்கள் முன் முடிவுகளுடன் எழுதப்பட்டதாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நூல் அவர் தினமணி மற்றும் பல இதழ்களில் எழுதிய கட்டுரை தொகுப்பு.
12ம் நூற்றாண்டில் சேக்கிழாரால் பெரிய புராணம் எழுதப்பட்ட பிறகு பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 16ம் நூற்றாண்டில் உபமன்யு பக்த விலாசம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப் பட்டது. பெரியபுராண மூலத்தில் இருந்து மொழி பெயர்க்கப் பட்டதால் பிற்காலத்தில் நாயன்மார் வரலாற்றில் உள்ள பல அகழிகளை நிரப்ப பெரிதும் உதவுகிறது. இந்நூலில் பெரும்பாலான கட்டுரைகளில் உபமன்யு பக்த விலாசம் மற்றும் அகஸ்திய பக்த விலாசம் இவற்றோடு பெரிய புராணத்தை ஒப்பிட்டு பல விடுபட்ட பதிகங்களை ஆராய்ந்திருக்கிறார். பிற கட்டுரைகள் சிலவும் இந்த தொகுப்பில் உள்ளன.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உபமன்யு பக்த விலாசம் குறித்த கல்வெட்டை இவர் கண்டடைவதே ஒரு தற்செயாலான நிகழ்வு. காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி அறிவுரையின் படி வேறொரு கல்வெட்டு படியெடுக்க சென்றபோது அருகில் அப்பர் புடைப்பு சிற்பமும்,
“திருவேகம்பமுடைய நாயனார்; அறுபத்து மூவர் புராணம் சம்ஸ்கிருத பாஷையில் செய்த “சிவபக்த விலாசத்தை” உகந்து செவிசாய்த்து அருளுகையில் இக்கோயில் தானத்தாரும் மாஹேஸ்வரரும் சந்தோஷித்து ஸ்தலத்துக்கு கர்த்தரான போகய்ய மஹாராஜா எழுதியது” என்ற கல்வெட்டை காண்கிறார். இது விஜயநகர அரசர் அச்சுத்தராயர் ஆட்சி காலத்தில் 1532ம் ஆண்டு ஸ்ரீனிவாச கவி என்பவர் எழுதிய நூலை குறித்த கல்வெட்டு. அதை அகஸ்தியர் பக்த விலாசம் மற்றும் உபமன்யு பக்த விலாசம் நூல்களுடன் ஒப்பிட்டு பிற நூல்களை விலக்கி இது உபமன்யு பக்த விலாசம் தான் என்று நிறுவுகிறார்.
50 ஆண்டுகளுக்கு முன் பெரியபுராணம் நூலே இந்த நூலின் தழுவல் என்றெல்லாம் விவாதித்திருக்கிறார்கள். சுந்தரர் பாடிய திருதொண்டதொகையை முதல் நூலாக கொண்டு நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்ட திருவந்தாதி பாடுகிறார். அதை வழிநூலாக கொண்டு சேக்கிழார் பெருமான் பாடியது பெரியபுராணம். உ.ப.வி த்தில் அனபாயன் பெயரை குறிப்பதால் அதுவே பெரியபுராணத்திற்கு பிந்தைய மொழி பெயர்ப்பு என்பது ஒரு கட்டுரையின் முடிவு.
கி.பி 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெள்ளியம்பலவான சாமிகள் சில பாடல்களை எழுதி பெரியபுராணத்தில் சேர்த்துவிட்டார், அவை வெள்ளிபாடல்கள் அல்லது இடை செருகல் என்று விலக்கப் படுகிறது. திருமலை சிறப்பில் அடிமுடி தேடிய புராணத்தில் பிரம்மா அன்னப்பறவையாக முடியை தேடி சென்றார் எனும் பாடலுக்கு அடுத்த பாடலாக விஷ்ணு ஏனமாகி(பன்றி) அடியை காணசென்றார் என்ற பாடல் வெள்ளிபாடலாக குறிக்கப் பட்டுள்ளது. சிவக்கவிமணி CKS உரையிலும் வெள்ளிபாடலாகவே குறித்துள்ளார். உ.ப.வி த்தில் இதே பாடலின் நேர் மொழிபெயர்ப்பு உள்ளது. அப்பாடலே பொருளை முழுமை செய்வதாலும் நேர் மொழிபெயர்பாவதாலும் அது வெள்ளிபாடல் இல்லை என்கிறார்.
அண்ணாமலை மறைந்ததோ என்ற கட்டுரை சுவாரஸ்யமானது. சுந்தரர் தென் திசையில் உதிக்க காரணம் என்ன என்ற வினாவிற்கு தென் திசையின் சிறப்பாக உபமன்யு முனிவர் கூறும்போது இத்திசையில் தான் தில்லை, திருவாரூர், காஞ்சி, திருவையாறு, திருத்தோணிபுரம்(சீர்காழி) ஆகிய தலங்கள் உள்ளன என்று விரித்துக் கூறுகிறார். ஆனால் அதே பகுதி உ.ப.வி த்தில் தில்லை, திருவண்ணாமலை, திருவாரூர், காஞ்சி, திருவையாறு, திருத்தோணிபுரம் என்று வரிசை மாறியுள்ளது. திருவண்ணாமலை மூலத்தில் இருந்து பின் மறைந்துள்ளதா என்று திருத்திய பதிப்புகள் வரும்போது சுவடிகளை ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று open ended ஆக விட்டுள்ளார்.
நாகை காரோணத்தில் சுந்தரர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். “புத்தூர்” என தொடங்கும் பதிகமும் “பொன் ஆர் இதழி” என தொடங்குவதும். பொன்னார் இதழி பதிகம் வெள்ளிபாடல் என விலக்கப் பட்டுள்ளது. பெரியபுராணமும் உ.ப.வி ம் சுந்தரர் சேரமான் பெருமானோடு காரோணத்தை தரிசித்த போது மற்றுமொரு பதிகம் பாடியுள்ளார் என்று குறிப்பிடுகிறது. இதையும் இணைத்தால் 101 பதிகங்கள் வரும். திருமுறை கண்ட புராணத்தில் சுந்தரர் பதிகங்கள் 100 என்று குறிக்கப் பட்டுள்ளதால் வேறொரு பதிகம் விலக்கப் பட வேண்டும் அது என்னவென்று ஆராயவேண்டுமென்று சொல்லி முடிகிறது ஒரு கட்டுரை.
திருப்பாச்சூர் கோயிலில் அப்பர் பாடிய இரண்டு பதிகங்கள் தான் கிடைத்துள்ளன மேலும் ஒரு பதிகம் இருந்து பின்னாளில் மறைந்துள்ளது என்று உபமன்யு பக்த விலாசத்தை கொண்டு நிறுவியுள்ளார். இந்த கட்டுரையை திருப்பாச்சூர் கோயில் குறித்த தமிழ் விக்கி பதிவு எழுதிய நண்பர் சிவ கிஷோருக்கு அனுப்பினேன். இதையும் குறிப்பிட்டு பதிவை செம்மையாக்க.
ராஜ ராஜன் வழிபட்ட பிள்ளையார் என்ற கட்டுரை தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு ராஜ ராஜன் செய்தளித்த பிள்ளையார் செப்பு திருமேனிகளை குறித்து ஆவணப் படுத்துகிறது.
ஒவ்வொரு கட்டுரையும் சிறிய மணியை போன்ற சிறிய செய்திகளை மட்டும் சொல்கிறது இதை இணைத்து சுவாரஸ்யத்தை நாம் தான் உருவாக்கிகொள்ளவேண்டும். பெரியபுராண ஆராய்ச்சி மையமாக கொண்டு மற்ற சில ஆய்வு கட்டுரைகளும் அடங்கிய இந்த சிறு நூல் ஆய்வு நூலாக முக்கியமானது.
தமிழ் மரபு அறக்கட்டளை சென்றாண்டு பேச்சு கச்சேரியில் முனைவர் G சங்கர நாராயணன் “பல மொழிகளில் பக்தர்களின் சரித்திரம்” என்ற உரையில் அகஸ்திய பக்த விலாசம் மற்றும் உபமன்யு பக்த விலாசத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். சென்னை புத்தக கண்காட்சியில் அவர சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த அகஸ்திய பக்த விலாசம் நூல் கிடைத்தது. அதையும் CKS உரையையும் அருகருகே வைத்து படிக்கும்போது இன்னும் பல புதிய செய்திகள் வெளிப்படும்.
புத்தக சுட்டி
மனோ
5 மே 2026
திருவானைக்காவல்

Comments
Post a Comment