Skip to main content

அருமணிகளும் அணியாரமும் 💎 ❤️

அருமணிகளும் அணியாரமும்

தீவிர வாசிப்பும் பயணமும் தொடங்கியதில் இருந்து கொண்டிருக்கும் உறுதி வார இறுதி நாட்களை ஒருபோதும் ஒழுகிச்செல்ல விட கூடாது என்பது.


திரிபுவனம் கம்பஹரேஸ்வரர் ஆலயம் 

அதற்காகவே வெள்ளி இரவே கொஞ்சம் இழுத்து பிடித்து வேலை எல்லாவற்றையும் முடித்து விடுகிறேன். 5 நாட்களை சாமிக்கு விட்டு விட்டு இரண்டு நாட்கள் மட்டும் தான் நாம் எடுத்துகொள்கிறோம். பயண திட்டம் இல்லாத நாட்களில் கூட முரளி காப்பிக்காகவாவது சீக்கிரம் எழுந்துவிடுவேன். "இது ஒரு வினோத பிறவி வார நாள்ல தான் சீக்கிரம் எந்திரிப்பாங்க இது லீவு நாள்ல rest எடுக்காம சீக்கிரம் எந்திரிக்கும்" என்று அம்மா வைதுகொண்டிருப்பாள்.  


5.30 மணி தாம்பரம் ரயிலை பிடிப்பதாக திட்டம். திருவானைக்கோவிலில் இருந்து சத்திரம் வரையில் ஆட்டோ, அதன் பின் பேருந்து, திருச்சி முதல் கும்பகோணம் ரயில், கும்பகோணத்தில் இருந்து திருவிசநல்லூர்(திருவிசலூர்) வரை சிற்றுந்து திருவிசநல்லூர் இருந்து கைகாட்டி வரை லிஃப்ட் அதன் பின் 1 கிலோமீட்டர் நடை என்று பயணம் செய்து திருவிசநல்லூர் சிவயோகநாதர் கோயிலுக்கு வந்து சேர்ந்தேன்.  இரவு பெய்த கன மழையால் எங்கும் இனிமையான சூழல். திருச்சி ரயில் நிலையத்தில் பில்டர் காப்பி என்னும் சம்பிரதாயத்தை முடித்து ரயில் ஏறினேன்.


சிவலோகநாதர் கோயில் 

திருமுறை பதிகங்களில் தீந்தமிழ் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தாலும் கிராமப்புற கோயில்கள் சிவன் கோயில் என்றும் மாயவரம் சீர்காழி போன்ற நகரின் முக்கிய கோயில்கள் பெரிய கோயில் என்றும் தான் அழைக்கப் படுகின்றன. சிவயோகநாதர் என்று கோயில் என்று கேட்டு பின் சுதாரித்து சிவன் கோயில் என்று மாற்றிக்கொண்டேன். அந்த பைரவர் கோயில் தான் என்று சொல்லி கைகாட்டியிடம் அண்ணா இறக்கிவிட்டு சென்றார். சுற்றும் வயல் வெளிகளில் பச்சையம் சூழ்ந்திருக்க(டெல்டா பகுதி கோயில்களை விவரிக்கும்போது இந்த cliche வை தவிர்க முடிவதில்லை) 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்திருந்த கோயில். 


சிவலோகநாதர் கோயில் 


திருவிசலூர் சம்பந்தர் பாடல் பெற்ற தலம். திருவுந்தியார் இயற்றிய உய்ய வந்த நாயனார் பிறந்த தலம். சோழர் கால கற்றளி. சுந்தர சோழர் காலத்தில் இருந்து ராஜேந்திரன் காலம் வரைக்கும் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. 7 சிவ யோகிகள் லிங்க உருவில் ஒன்று கலந்ததால் இறைவன் சிவயோகநாதர் என்ற நாமம் பெற்றதாக தல புராணம் சொல்கிறது.


வீணாதர தட்சிணாமூர்த்தி 


5 நிலை ராஜகோபுரத்தை அடுத்து கொடிமரத்து விநாயகரும் அவரை அடுத்து பலிபீடமும் ரிஷப மண்டபமும் உள்ளன. கிழக்கு நோக்கிய மையக்கருவரையின் தெற்கில் விநாயகர், தட்சிணாமூர்த்தி மேற்கில் விஷ்ணு வடக்கில் பிரம்மா மற்றும் துர்க்கை கோஷ்டங்கள் உள்ளன. முன்பிருந்த சோழர் கற்றளியை போலவே முற்று முழுதாக மீண்டும் செய்து பார்த்திருக்கிறார்கள். தட்சிணாமூர்த்தி தவிர மற்ற கோஷ்ட சிற்பங்கள் அனைத்துமே சமீப காலத்தவையாக தோற்றமளிக்கின்றன. Attentionல்  நிற்கவைக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் அனைத்துமே சமீபத்தைய சிற்பங்கள் என்று கொள்ளலாம். வடக்கு கோஷ்டத்தில் உள்ள பிரம்மாவை பார்த்த பின் குடந்தை கீழ்க்கோட்டதில் உள்ள பிரம்மா நினைவிற்கு வந்தார். மூன்று முகத்திலும் அத்தனை பாவத்தோடு அமைந்த பிரம்மா குடந்தை நாகேஸ்வரன் கோயிலில் உள்ளவர். அர்த்தமண்டபத்தில் அஸ்திரதேவர் சோமாஸ்கந்தர் போன்ற செப்புதிருமேனிகள் உள்ளன.


சிவயோகநாதர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், முகமண்டபம் என்ற அமைப்பில் உள்ளது. கல்வெட்டுக்களும், சிற்பங்களும் கொண்டு மைய கட்டுமானத்திற்கு வலது புறம் வடக்கு நோக்கி உள்ள சந்நிதி காலத்தால் பழையதென அறியமுடிகிறது. இப்போது கட்டிட சாமான்கள் போட்டுவைக்கும் store room ஆக பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்நிதியின் பூதம் போன்ற துவாரபாலகரும் வேதி பாதத்தில் உள்ள குறுஞ்சிற்பங்களும் சிறப்பானவை. நன்றோ தீதோ முழுமை எங்கு கூடினாலும் அங்கு தெய்வம் தோன்றுகிறது என்று வெண்முரசில் ஒரு வரி வரும். இந்த சன்னிதி தனியாக ஒரு முழுமையில், Absoluteல் இருந்திருக்கும். இப்போது அந்த ஒருமையை சிதைத்துவிட்டனர். 



திருச்சுற்று 

யோகினி குறுஞ்சிற்பம் இதுவரை பார்த்திராதது. தனியாக உள்ள இந்த சந்நிதியை ஒட்டியபடி முதல் பிரகாரத்தில் மதில் சுவர் உள்ளது. இந்த சந்நிதியின் கிழக்கு கோஷ்டத்தில் வீணாதர தட்சிணாமூர்த்தியும் மதிலுக்கு வெளியில் உள்ள தெற்கு கோஷ்டத்தில் பிட்சாடனர் சிற்பமும் உள்ளன. நிருதி மூலையில் விநாயகரும் லக்ஷ்மி நாராயணரும் சப்த கன்னிமாரும் நால்வர் மற்றும் உய்யவந்த நாயனார் உருவங்களும் உள்ளன. 


இங்கு 4 பைரவர் உருவங்கள் ஒன்றாக இருப்பதால் பைரவர் வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. திருச்சுற்றில் சூரியன், சந்திரன், நவகிரகங்கள், கஜலட்சுமி பரிவார தெய்வங்கள் உள்ளன. முதல் பிரகார மதில் சுவற்றிற்கு வெளியில் அற்புதமான கங்காளர் உருவம் உள்ளது. தேவராஜன் எனும் உத்திராபதீஸ்வரரை போல வலக்கையில் டமருகம் ஏந்தியவரின் கீழ்  மான் மற்றும் பிச்சை பாத்திரம் ஏந்தும் பூதமும் அமைத்துள்ளன. கோஷ்ட சிற்பத்திற்கு இருபுறமும் உள்ள வேதி பாதத்தில் அரசனும் அரசியும் அஞ்சலி ஹஸ்தத்துடன் உள்ளனர். இவர்கள் சோழ அரச குடும்பத்தை சார்ந்தவர்களாகவோ அல்லது சிற்றரசராகவோ இருந்திருக்கலாம். இவர்களை குறித்த எந்த ஒரு தகவலும் இல்லை. எந்த குறிப்பும் இல்லை என்பதனாலேயே இவர்கள் வரலாற்றில் ஒரு அங்கமென்றானவர்கள். இந்த கல் இன்னும் ஒரு 1000 ஆண்டுகள் இவர்கள் உருவங்களை தாங்கி நிற்கும். சில குறிப்புகள், புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு சுற்றிவந்தேன். 



கொடிமரத்தை ஒட்டி அம்மன் சன்னிதி பிற்காலத்தில் எழுப்பப் பட்டுள்ளது. இறைவி சௌந்தரநாயகி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறாள். ரிஷப ராசி தலமாக சமீபகாலத்தில் அறியப்படுகிறது. 


வேதகாலத்தில் functional gods இருந்தனர். மழை வேண்டுமென்றால் வருணனை வரவழைத்து அவி கொடுத்தால் அவர் மழையை கொடுப்பார். அதேபோல் அக்னி இந்திரன் சூரியன் பலர். அதே காலகட்டத்தில் சிவன் விஷ்ணு சக்தி என்னும் omnipotent தெய்வங்களும் எழுந்துவந்தனர். பிராமணங்களின் காலகட்டத்தில் நிறுவப்பட்ட பெருந்தெய்வங்கள் புராண காலகட்டத்தில் நிலைபெற்றுவிட்டனர். ஆனால் இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு நாம் மீண்டும் வேத காலத்திற்கு சென்றுகொண்டிருப்பதாக தோன்றுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் நட்சத்திரத்திற்கும் அதற்கான பலனிற்கும் அதற்கென கோள்களையும் தனியான பரிகாரங்களையும் பரிந்துரைக்க தொடங்கி இருக்கின்றனர். கடன் நிவர்த்தி தலம், திருமண பரிகார தலம், சட்ட சிக்கல் நிவர்த்தி தலம் என்று பல. வருங்காலத்தில் NEET தேர்வில் வெல்வதற்கு புதிய தெய்வம் உருவாக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை. 


கற்கடேஸ்வரர் கோயில்

இந்த தலத்திற்கு ஒன்றரை கிலோமீட்டர் வடக்கில் நடந்து கற்கடேஸ்வரர் கோயிலை அடைந்தேன். கற்கடேஸ்வரர் கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தலமாக பரிந்துரைக்கப்படுகிறார். பரிகாரம் industry எவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ளது என்று இந்த ஒரு கோயிலை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். 10 கார்களுக்கு மேல் வயல் வெளிக்கு நடுவில் உள்ள கோயிலில் நின்றிருந்தன. பண்டைய கோயில்கள் எவற்றிலுமே நவகிரகம் என்ற 9 கோள் அமைப்பு வைத்து வழிபடப்பட்டதில்லை, சூரியன் சந்திரன் தனி பரிவார தெய்வங்களாகவும், நாக ராஜர் என்று மட்டுமே வணங்கப்படனர். சிதம்பரம் கோபுரத்தில் தான் முதன் முதலில் நவகோள் அமைப்பு தொடங்கியது என்று சொன்னபோது உறவினர் ஒருவர் நாத்திகம் பேசுவதாக புரிந்துகொண்டார். 


ஊர்த்துவ தாண்டவர்

திருத்தேவன்குடி என்ற ஊர் இப்போது இல்லை இந்த கோயில் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இதுவும் சம்பந்தர் பதிகம் பெற்ற தலம். நண்டு வந்து இங்கு இறைவனை வழிபட்டதாக தலபுராணம். அருமருந்தம்மை அபூர்வ நாயகி என்று இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. ராஜராஜன் செம்பியன் மாதேவி காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. கோஷ்ட சிற்பங்கள் பிற்காலத்தவை. ஸ்தூபி வரையிலான கல்லாலான சுத்த விமானம். க்ரீவ கோஷ்ட சிற்பங்கள், சிகரத்தின் நாசியில் உள்ள சிற்பங்களும் குறிப்பிடத்தக்கவை. 


நுழைவாயிலில் அஷ்டமங்கலங்கள்

பிரஸ்தரத்தின் ஒரு நாசியில் 16 கரங்களுடைய ஊர்த்துவதாண்டவர் சிற்பம் இருந்தது. ஏரத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் ஒரு கிறுக்கன் வந்து இந்த சிற்பத்தை பார்க்கிறான் என்று இந்த சிற்பி விண்ணில் இருந்து புன்னகைத்திருக்கக் கூடும். மகாமண்டபத்திற்கு இடது புறம் நுழையும் வாயிலில் நடுவில் கஜலக்ஷ்மியுடன் அஷ்டமங்கலங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தஞ்சை பெரிய கோயிலில் அணுக்கன் திருவாயிலில் அஷ்டமங்கலங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அரச மரபினர் நுழையும் வாயில்களில் அஷ்டமங்கலங்கள் அமைக்கும் மரபு இருந்துள்ளது.


கோயிலின் வெளியில் உள்ள தாமரை குளத்தை தாண்டி ஆலமரத்தடியில் சப்த கன்னிமார் உருவங்களை வணங்கிகொண்டிருந்தபோது ஒரு நடுவயது என்னன் வந்து லிஃப்ட் வேண்டுமா என்று கேட்டு ஏற்றிக்கொண்டார். கற்கடேஸ்வரர் கோயிலில் இருந்து பேருந்து நிலையத்திற்கு 2.5 கிலோமீட்டர் தூரம். வரும் வழியில் அவர் சிவயோகநாதர் கோயிலுக்கு சென்று விளக்கு  போட்டுவிட்டு வருவதாக சொல்லி சென்று வந்தார். “உங்களுக்கு கடக ராசியா இந்த கோயிலுக்கு வந்திருக்கிங்க” என்றார். நாளும் கோளும் அடியார்க்கு இல்லை என்று நினைத்துக்கொண்டு “இல்ல னா சும்மா கோயில் பார்க்க வந்தேன்” என்றேன். பாவம் கல்யாணம் ஆகாம கோயிலுக்கு வந்துட்டு சொல்ல தயங்குறாப்ள என்று நினைத்திருக்கக் கூடும். நேரம் 10.45 ஆகி இருந்தது. திருப்புவனம் போகனும் பஸ் ஸ்டோப்ல விட்டுருங்க என்றேன். நானும் அங்க தான் போறேன் வாங்க என்று கூட்டி சென்றார். 


திருப்புவனம் கம்பஹரேஸ்வரர் கோயில். நடுக்கம் தீர்த்த நாயகர் என்று தமிழ் பெயர். சோழர் காலத்தைய பிரம்மாண்ட கோயில் வரிசையில் இறுதியாக எழுப்பப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கன் மதுரையை வெற்றி கொண்ட பொன்னை கொண்டு அவரது குரு ஈஸ்வர சிவனின் ஆணைப்படி இந்த கோயிலை எழுப்பியதாக கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன. ஒருமுறை பார்த்த சிற்பம் அதன் சிற்ப அமைப்போடு, சுற்றியுள்ளவையும் ஒருபோதும் நினைவிலிருந்து நீங்குவதில்லை. பட்டடக்கல் விருபாக்ஷர் கோயில் தூணில் பார்த்த ராவணன் கைலையை பெயர்க்க முயற்சிக்கும் சிற்பம் இன்றும் நினைவில் உள்ளது. 


தென் திருவாலங்காடு தலம் மாயவரத்திற்கு அருகில் உள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் எடுத்த கோயில் அங்குள்ள இம்மனனின் சிற்பம் நினைவிற்கு வந்தது. கம்பீரமான தோற்றத்துடன் வாளை இறுகி பிடித்து நின்றிருக்கும் பேரரசன் மட்டும் தான் முதலில் தோன்றும். முடிந்த கொண்டை உச்சியில் இரண்டு பாதுகைகள் பொறிக்கப்பட்டிருக்கும். இவனும் சிவபாத சேகரன். 3ம் குலோத்துங்கன் காலத்தில் தென்னகம் முழுமையும் சோழர் ஆட்சியில் இருந்தது. போர் சூழலே அற்ற திரிபுவன சக்கரவர்த்தியாக விளங்கியவன். கி.பி 1178-1218 40 ஆண்டுகாலம் இவனது ஆட்சி நடைபெற்றது. மதுரையில் பாண்டியர் ஆதிக்கத்தை அழித்து சோழ பேரரசை மீண்டும் நிறுவியவன். ஒருபக்கம் மண்ணுலகில் தனக்கு நிகர் எவரும் இல்லை என்று பிரகடனப்படுத்திகொண்டே சிவனது பாதுகைகளை சென்னியில் சூடுகிறேன் என்று சொல்லும் இருமை பரவசமளிக்கக் கூடியது. 


நன்றி - கடம்பூர் விஜய், இணையம் 


கோயில் தொடர்புடையவர் ஒருவர் தவறி விட்டதால் எல்லா சந்நிதிகளும் திறக்கவில்லை. உடன் வந்தவர் கிழக்கு வாயில் வழியாக உள்ளே செல்ல நீங்க போங்க நான் கோபுரத்த பார்த்துட்டு வரேன் என்று விடைபெற்றுகொண்டேன். திருவாரூரின் கிழக்கு ராஜ கோபுரத்தை ஒத்த அமைப்பை உடைய ராஜ கோபுரம். நுழைவாயிலில் சென்ற நூற்றண்டில் தருமை ஆதினத்தின் சார்பில் ஐராவனத்தின் மீது சுந்தரரும், குதிரையில் சேரமான் பெருமானும் கோயிலை நோக்கி செல்வதாக சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறை விமானமே கையிலை என்பதால் கோயிலை நோக்கி அமைந்துள்ளன.


தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரத்தை போலவே கருவறையை நோக்கி நேராக படிகள் அமைக்காமல் முகமண்டபத்தின் வலதும் இடதுமாக படிகள் அமைந்திருக்கும். கருவறைக்கு நேராக நுழைவது ஆணவத்தின் குறியீடென்பதால் இந்த அமைப்பு. 12.30க்கு கோயில் மூடப்படுமென்பதால் 1 மணி நேரத்தில் வேகமாக சுற்றி வந்து பார்த்தேன். முகமண்டபத்தில் பிரமாண்டமான நடராஜர் திருமேனி உள்ளது. நாளை இரவு ஆனி திருமஞ்சனம் இரவு முழுக்க தில்லை கூத்தன் நீராட்டு கண்டருளும் தினம். மகாமண்டபத்தில் உள்ள செப்பு திருமேனிகளை வரிசையாக பார்த்துகொண்டிருந்தபோது சட்டென கம்பீரமான ஒரு பிட்சாண்டவர் திருமேனி இருந்தது. 


ஜடாமண்டலம் என்னும் சிகை அமைப்பு பிட்சாண்டவர் மற்றும் சில தட்சிணாமூர்த்தி படிமங்களுக்கே உரியது.  வட்ட வடிவ சிகையில் இறுதியில் சில முடிச்சுகளும் பிறை, பிரம்ம கபாலம், உன்மத்த மலர் நட்சத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இன்று(20 ஜூன் 2026) இரவு சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு பிட்சாண்டவர் தங்க ரத்தத்தில் புறப்பாடு. ஆரூர் பிட்சாண்டவரை அடுத்து நான் பார்த்த அற்புதமான பிட்சாண்டவர் படிமம். 

மூலவரை வணங்கி விட்டு தென்புற படிகளில் இறங்கிய பொது விண்ணிழி விமானம் முதல் முறையாக காட்சியளித்தது. எத்தனை பெரிய கனவின் வடிவம். 

விண்ணிலிருந்து விழுந்த ஒரு கலைபடைப்பென நின்றிருக்கிறது. தஞ்சை கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் திருப்புவனம் கோயிலின் அமைப்பில் கட்டுமானம் இல்லாத வெற்றிடம் பெரும் பரவசத்தை அளிக்கக்கூடியது. ஒரே இடத்தில் நின்று ஒட்டுமொத்த கோயிலையும் பார்க்கும் வாய்ப்புள்ள வெகு சில கோயில்களே இன்றுள்ளன. கோஷ்ட தெய்வங்களில் முதலில் இருப்பவர் சட்டைநாதர். காவிரிக்கரை கோயில்கள் அனைத்திலுமே சட்டைநாதர் என்னும் பைரவ வடிவம் முக்கியத்துவம் வாய்ந்தது. விமானத்திலோ அல்லது முதல் நிலையிலோ அமைக்கப்பட்டிருக்கும். சீர்காழியில் இரண்டாம் நிலையில் தோணியப்பருக்கு மேல் நின்றிருக்கிறார் சட்டைநாதர். வாமன அவதாரத்தில் திரிவிக்ரமராக உருவமெடுத்த விஷ்ணுவின் கர்வத்தை அழித்து அவரது தோலை சட்டையாகவும், முதுகெலும்பை கதையாகவும் கொண்ட சிவனின் உக்ர வடிவம் சட்டைநாதர். 


கம்பஹரேஸ்வரர் விமானம் மேற்கு தோற்றம்


இத்தகைய பெரிய கோயில்கள் ஒவ்வொரு சிற்பமுமே தன்னளவில் பெரிதாகிவிடுகிறது, கருவறைக்கு பின்னுள்ள லிங்கோத்பவர் பிரம்மாண்டமான திருமேனி, வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவின் உருவம் இல்லை. ஐரோப்பிய அருங்காட்சியகங்கள் எவற்றிலேனும் இருக்கலாம். துர்கை கோஷ்டத்தில் உள்ள திருமேனி தமிழகத்தில் உள்ள துர்கை உருவங்களிலேயே பெரியதாக இருக்க கூடும். வட கிழக்கு மூளையில் இருந்து சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். எத்தனை பெரிய கனவின் நிகழ் வடிவம் இந்த பேராலயம். எத்தனை ஆயிரம் மக்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருப்பர். தஞ்சை கோயிலை கட்டுவதற்கு கி.பி 1004- கி.பி 1010 என்று 6 ஆண்டுகள் ஆனது. திருபுவனத்திற்கு கொஞ்சம் குறைவாக எடுத்திருக்கலாம். குடவாயிலரின் புத்தகம் வந்தால் இந்த கோயிலை குறித்தும் விரிவான ஆவணமாக இருக்கும். அழகியல் நோக்கில் தாராசுரம், தஞ்சை, திருபுவனம், கங்கை கொண்டசோழபுரம் என்று வரிசைபடுத்துவேன். திருச்சுற்றில் தர்மசம்வர்த்தினி - அறம் வளர்த்த நாயகி சன்னிதி உள்ளது.பரிவார தெய்வமாக  சரபேஸ்வரர் இன்று பரிகாரத்திற்கான தனித்த தெய்வமாகிவிட்டார். மூல கல் கட்டுமானத்தின் ஒழுங்கை குலைக்கும் விதமாக இந்த சந்நிதிக்கு தனியாக எடுக்கப்பட்ட மண்டபம் மற்றும் பல சிற்ப அழிவுகள் குறித்து ஜெ  https://www.jeyamohan.in/148617/ கட்டுரை எழுதியுள்ளார் தொடர்ந்து பல விவாதங்களும் நடைபெறுகின்றன. 


கல்ஹாரத்திற்கு மேல் உள்ள கர்ணகூடம் என்ற அமைப்பே பல குட்டி குட்டி கோயில்களை இணைத்து இணைத்து பெரிய கோயில் ஒன்றை நிர்மாணிக்கும் தத்துவத்தை குறிப்பது. தஞ்சை கோயிலின் ஒரு துவாரபாலகர் சிலையின் கல்லை கொண்டே ஒரு முழு கோயிலையும் எழுப்பும் அளவில் தான் ஆரம்பகால சிறிய கற்றளிகள் இருந்தன. தஞ்சை பெரிய கோயில் அவ்வகையில் ஒரு wild dream.


ஜெ ஹொய்சாலர் கோயிலில் அமர்ந்து பேசிய சிற்றுரையில் அழகிய தனித்த கோயில்களை jewel போன்ற கோயில்கள் என்று சொல்லியிருப்பார். சிவயோகநாதர் கோயில் ஒரு மணி, புள்ளமங்கை ஆலந்துறையார் ஒரு மோதிரத்தின் அரிய மணி, கற்கடேஸ்வரர் ஒரு முத்து, இப்படி நூற்றுக்கணக்கான அறிய மணிகள் தமிழகமெங்கும், பாரத வர்ஷமெங்கும் சிதறிக்கிடக்கின்றன. அப்படி குட்டி குட்டி அறிய பல மணிகளை கோர்த்த ஆரம் திருப்புவனம் போன்ற பெருங்கோயில்கள். நிலமகள் சூடி நிற்கும் பொன்னாபரணங்கள்.


மனோ 

20 ஜூன் 2026,

திருச்சி 



  1. திருவியலூர் - https://shaivam.org/hindu-hub/temples/place/50/thiruviyalur-yokananteeswarar-temple/#gsc.tab=0

  2. கற்கடேஸ்வரர் - https://shaivam.org/hindu-hub/temples/place/thiruntudevankudi-karkkatakesvarar-temple/#gsc.tab=0

Comments

Popular posts from this blog

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...