Skip to main content

தித்திக்கும் தற்செயல்கள் ❤️

எண்ணியிராத தற்செயல் நிகழ்வு பயணத்தின் பிரதான நினைவாக எஞ்சுவது பல பயணங்களில் நிகழ்ந்துள்ளது. புகழ்பெற்ற blogger வேலுதரன் அவர்களை துடையூர் கோயிலில் சந்தித்தது அப்படி ஒரு நிகழ்வு. 

வேலுதரனுடன் 


இன்றிரவு பெங்களூர் புறப்படுவதால் அரை நாளை வீணாக்க வேண்டாம் என்று கலைக்கோவனின் எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு துடையூர் கோயில் சென்று வந்தேன். அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் இருந்து வீட்டிற்கு 200 மீட்டருக்குள் தான் இருக்குமென்றாலும் ஆடிவெள்ளி அன்று இரவு தரிசனம் முடித்து வர 11 மணி ஆகிவிட்டது. காலை 6.30 மணிக்கு எழுந்து கிளம்பி பேருந்து பிடித்து கோயில் அடைய 8.30 க்கு மேல் ஆகிவிட்டது. டோல்கேட்டில் நொச்சியம் வழி செல்லும் ஒவ்வொரு பேருந்திலும் துடையூர் போகுமா என்று கேட்க துறையூர் தானே போகும் போகும் என்று சொன்ன பல நடத்துனர்களிடம் போராடவேண்டி இருந்தது.


துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில் சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோழர் கால சிவன் கோயில். சுந்தரசோழர், ராஜராஜன், ராஜேந்திரன் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அப்பரின் அடைவு திருத்தண்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வைப்பு தலம். கொள்ளிடத்திற்கும் ஐய்யன் வாய்க்காலுக்கும் இடையில் உள்ள மணலில் அமைந்துள்ளது. காவிரி நிரம்பிய பின்னே முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்திற்கு நீர் திருப்பி விடப்படும். மார்ச் மாதம் தொடங்கிய கோடை இன்னும் தொடர்வதால், கோடை மழை என்ற ஒன்று இவ்வாண்டு நிகழவே இல்லாததால் கொள்ளிடம் துளி நீர் இல்லாதிருந்தது. 


9 மணிக்கு தான் கோயில் திறக்கும் என்று mapsஇலும் சரியாக யாரோ பதிவேற்றி இருந்தார்கள். கோயிலுக்கு பின் அமைந்துள்ள கலிங்கமுடையம்மன் கோயில் எல்லை தெய்வமாக அமைந்துள்ளது.


கலிங்கமுடையம்மன் கோயில்


சப்த கன்னியர் சிற்ப தொகையில் வைஷ்ணவியை மட்டும் தேர்ந்தெடுத்து கலிங்கமுடையம்மன் ஆக்கியிருக்கிறார்கள். கலிங்கத்திற்கும் துடையூருக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. கோயிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு “அருள்மிகு வாராகி அம்மன் கோயில் உள்ளது“. அந்த ஊரில் வராகியை தேர்ந்தெடுத்துகொண்டனர். விஷமங்களேஸ்வரர் கோயிலில் பரிவார தெய்வமாக இருந்து சப்த கன்னியர் தொகுப்பு பின்னாளில் இடம் பெயர்ந்திருக்கலாம். கன்னியர் சிலை அளவிலேயே கோயிலுக்குள் ஒரு ஐய்யனார் சிற்பம் உள்ளது. 


வழக்கம் போல் ஜேஷ்டை மாந்தி மாந்தனுடன் கோயிலுக்கு வெளியில் இருந்தாள். மாந்திக்கும் ஜேஷ்டைக்கும் இடையில் இடது கையை ஒரு பெட்டியில் வைத்திருக்கும் சிற்பம். ஜேஷ்டை இடது கையால் செல்வத்தை தருபவளாக கருத்தப்பட்டதால் செல்வப்பேழையுடன் அமைக்கும் மரபு இருந்திருக்கிறது.   பட்டவன், மதுரைவீரன், கருப்பண்ணசாமி என்று நாட்டார் தெய்வங்கள் அனைவரும் அமைந்த கோயில். 9 மணிக்கு அர்ச்சகர் வந்து முதலில் கலிங்கமுடையம்மன் கோயிலை திறந்து ஒரு கால பூஜை மட்டும் செய்து விளக்கேற்றி வைத்து விட்டு சிவன் கோயிலுக்கு சென்றார். 


வீணாதர தட்சிணாமூர்த்தி

கருவறை அர்த்தமண்டம் மட்டும் கொண்ட கட்டுமானம். பிற்காலத்தில் முன் மண்டபம் எழுப்பப் பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியில் ரிஷபமும் பலிபீடமும் உள்ளது. ஜகதியில் இருந்து தான் கட்டுமானம் காணக்கிடைக்கிறது. ஜகதி, முப்பட்டை குமுதம், கண்டபாதம், கண்டம், கம்பு, வேதி வரி, கம்பு, வேதி பாதம் ஆகிய உறுப்புகளுடன் வேதி பந்த அதிஷ்டானத்துடன் அமைந்த கோயில்.    பிரஸ்தரத்திற்கு மேல் உள்ள விமானம் பிற்கால சுதை. க்ரீவத்தில் 4 ரிஷபங்கள் அமைந்துள்ளன.


பெருஞ்சிற்பங்களாக அர்த்தமண்டபத்தில் தெற்கு கோஷ்டத்தில் ஞான சரஸ்வதி சிற்பம் உள்ளது. கங்கை கொண்ட சோழ புரத்தில் உள்ளதை ஒத்த ஞான சரஸ்வதி சிற்பம். பின்னிரு கையில் அட்சமாலை கமண்டலத்துடன் வலது முன் கரம் சின் முத்திரையுடன் அமைந்துள்ளது.  


துவாரபாலகர்களான திண்டி முண்டி உள்ளனர். சோழர் காலத்திற்கே உரிய அலங்காரமான துவாரபால்கர்கள். கருவறையின் தெற்கு கோஷ்டத்தில் வீணாதர தக்ஷிணாமூர்த்தி அமைந்துள்ளனர். ஞானம் உரைக்கும் குருவை தெற்கு நோக்கி அமைப்பது மரபு. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்தவர் தென்திசை கடவுள். ஆதீனங்களில் குருபீடம் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். கோளறு பதிகத்தில் வரும் மிக நல்ல வீணை தடவி என்ற வரிக்கு ஏற்ப சுட்டு விரல் சுண்டு விரல் இரு விரலிலும் வீணையை மீட்டாமல் மீட்டியிருந்தார். இந்த ஒரு சிற்பத்தை பார்ப்பதற்கே இந்த கோயிலுக்கு வரலாம். அத்தனை நளினமும், யாழ் மீட்டியபடி நடந்து வரும் பாணனை போன்ற நிலையில் அமைந்த சிற்பம். கீழே பூதம் டமருகத்துடனும் ஒரு பெண் தாளத்துடனும் அமைந்துள்ளனர்.


ஆலிங்கன சந்திரசேகரர்


கருவறையின் மேற்கு கோஷ்டத்தில் ஆலிங்கன சந்திர சேகரர், இந்த கோயிலின் பரிகார department இப்போது இவர் ஆளுகைகையின் கீழ் உள்ளது. ஒவ்வொரு கோயிலுக்கும் சில சிற்பங்கள் Brand ambassador ஆக உள்ளன. திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் உள்ள கங்காதரர் இப்போது ஒரு icon ஆகவே ஆகிவிட்டார். அதை போல இந்த கோயிலுக்கு இந்த இணையர். நான் சென்ற நேரம் ஜாதகத்தை வைத்து தனியாக அர்ச்சனை செய்துகொண்டிருந்தனர். அர்ச்சகர் கொஞ்சம் தாடியுடன் இருந்த என்னை பார்த்தபோது ஏனோ “நீங்களும் ஒரு policy போட்டுக்கோங்க” என்று சொல்லும் LIC ஏஜெண்டை போல தோன்றினார்.


கருவறையின் வடக்கு கோஷ்டத்தில் பிரம்மா உள்ளார். அர்த்தமண்டபத்தின் வடக்கு கோஷ்டத்தில் உள்ள துர்கை முக்கியமான சிற்பம். கண்ணிமாலை ஜ்வாலையால் ஆன திருவாசி வடதிசை நோக்கி அமைந்ததால் துர்கை என்று கொள்ளலாம் ஆனால் தாமரை ஏந்தியுள்ளதால் சற்று குழப்பமாக உள்ளது. தெற்கு நோக்கிய சண்டீஸ்வரர் தனி சன்னிதி கொண்டிருக்கிறார். 


பரிவார தெய்வங்களாக நிருதி மூலையில் விநாயகர், கருவறைக்கு நேர் பின்னே வள்ளி தெய்வானை, சமேத முருகர், வட கிழக்கு மூலையில் ஐயனர் தேவியுடன் அமைந்த விஷ்ணு மற்றும் வீரபத்திரர் என்று பெயரிட்ட ஒரு சிறிய சிற்பமும் உள்ளன. நுழைவாயில் உள்ள மேற்கு நோக்கிய பைரவரும் சூரியன் உஷா பிரத்யுஷா என்று பெயரிட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத விஷ்ணுவும் உள்ளனர். 


தரிசனம் முடித்து குறுஞ்சிற்பங்களை பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று ஒரு கூட்டமும் உள்ள வந்தது கூட்டத்தினர் ஒவ்வொருவரும் எல்லா சிற்பங்களையும் புகைப்படம் எடுத்துகொண்டிருந்தார் கையில் கலைக்கோவனின் புத்தகம் வைத்திருந்ததால் “நம்ம ஆளுங்க” என்று நினைத்துக்கொண்டேன். ராஜாஜரன் கல்வெட்டு எங்கு என்று தேடிக்கொண்டிருந்தனர். பழக்கப்பட்ட முகம் ஒன்று அந்த கூட்டத்தில் அருகில் வந்து ஒரு சிற்பத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தது. “சார், நீங்க வேலுதரன் தானே உங்க blog நெறைய படிச்சுருக்கேன் இப்போது கூட உங்க கட்டுரை படிச்சுட்டு தான் வரேன்” என்று கைபேசியில் எடுத்து காண்பித்தேன் தீவிரமான முகத்தில் இருந்து மலர்ந்து விட்டார். “சே proud of you பா” என்று சொல்லி அவரது மகள் திருஷ்டி கழித்தார். சென்ற ஆண்டு ஈரோடு தமிழ் விக்கி தூரன் விழாவில் சந்தித்திருக்கிறோம் சார் ஞாபகம் இருக்கா என்றேன். அவரால் நினைவு கூற முடியவில்லை. 


துர்க்கை கோஷ்ட சிற்பம்

வேலுதரன் தமிழகத்தில் முக்கியமான blogger. தமிழகத்தின் ஆயிரக்கணக்கான தொல்லியல் தடங்கள் தனி சிற்பங்கள் கோயில்களை தனி மனிதாக சென்று வரலாற்று சான்றுகள், பக்தி இலக்கிய சான்றுகள், புகைப்படங்கள், கல்வெட்டுக்கள் என்று பெரும் உழைப்புடன் ஆவணப்படுத்தி இருக்கிறார். தூரன் விழாவில் சந்தித்த போது முதலில் பாடல் பெற்ற தலம் என்று வைத்துக்கொண்டு எல்லா தலங்களையும் பார்த்து முடித்ததாக சொன்னார். தொடர்ந்து பல பயணங்கள் செய்து கோயில்களை குறித்து எழுதி வருகிறார். குடவாயில் நாகசாமி என்று பல ஆசிரியர்களின் நூல்களின் மூலம் குருதட்சணை சென்று சேர்கிறது ஆனால் இணையம் எனும் கல்லால மரம் பல குருமார்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. திரும்பி கொடுத்தது ஏதுமில்லை என்றாலும் அவர்களிடம் பெற்றுக்கொண்டது அதிகம்.


யாத்திசை என்ற குழுவுடன் இப்போது மரபு நடை வந்திருப்பதாக சொன்னார். இப்போது தமிழ் சூழலில் இத்தகைய மரபு நடைகள் பல நடைபெறுகின்றன. ஆலயங்கள் வேண்டி பெரும் ATM மெஷின் மட்டுமல்ல அவை கலைச்செல்வங்கள், பண்பாட்டின் தொட்டில் என்ற பிரக்ஞை வந்திருக்கிறது. மெல்ல மெல்ல எனது திராவிட இயக்க நண்பன் ஒருவனிடம் மட்டும் இதை விளக்க முயன்று தோற்றுகொண்டிருக்கிறேன். இத்தகைய பயணங்களின் நேர் எதிர் முகம் ஒரே நாளில் 3,9,15,27 கோயில்கள் பார்ப்பது என்று மேரத்தான் ஓடுவது. 


குடக்கூத்து குறுஞ்சிற்பம்  



இந்த குழு நிறைய முன் தயாரிப்புடன் உண்மையாகவே கற்கும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். வேலுதரனின் மகள் குடக்கூத்து எங்க பா இருக்கு திருச்சியில இருக்கற்துலயே இதுதான் சிறந்த குடக்கூத்து சிற்பபமாமே என்றார் பிரம்மா கோஷ்டத்திற்கு அருகில் இருந்த குடக்கூத்து ஆடும் சிற்பத்தை சுட்டி காட்டினேன். லிங்கத்தின் இரு புறமும் இருவர் நின்றிருக்க மார்கண்டேய புராணமா என்று பேசிக்கொண்டிருந்தனர். முன்னும் பின்னுமுள்ள சிற்பங்களை இணைத்து இது சண்டீச நாயனார் புராணம் என்று விளக்கினேன். எல்லா சிற்பங்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு கொஞ்ச நேரம் மரத்தடியில் அமர்ந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். 


நீங்கள் எழுதியதை படித்துவிட்டு வந்திருக்கிறேன் என்று சொன்னபோது வேலுதரன் மகிழ்ந்தது, நிறைவடைந்தது இயல்பு. அதற்காகத்தான் அவர் செயலாற்றுகிறார். அதை கேட்டு மகிழும் ஒரு மகளை பெற்றது அவரது நல்லூழ்.



மனோ 
18 ஜூலை 2026
திருச்சி 

Comments

Popular posts from this blog

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...