Skip to main content

அட்ட வசுக்கள்

 அட்ட வசுக்கள் 

காலசம்ஹாரர்

வேதங்கள் குறிப்பிடும் அக்னியும் புராணங்கள் குறிப்பிடும் அக்னியும் இரு வேறு உருவங்கள். அஷ்ட வசுக்கள் குறித்தும் விஷ்ணுவின் சேவகர்கள், கங்கையின் புதல்வர்கள், தர்மதேவனின் புதல்வர்கள், பிரபஞ்ச பருப்பொருட்களின் உருவகங்கள் என்று பல புராணங்கள் உள்ளன. 


சில நாட்களுக்கு முன் திருக்கடையூர் சென்றிருந்தபோது  வழக்கத்திற்கு மாறாக திருச்சுற்றின் திண்ணை அமைப்பில் மனித உருவங்களுடன் அமைக்கப்பட்ட 7 சிற்பங்களை பார்க்க முடிந்தது. அனலன் என்ற பெயர் மட்டுமே நினைவில் இருந்தது. நமது பைபிள் TA கோபிநாத ராவின் elements of hindu iconography புத்தகத்தில் Demi gods பக்கத்தில் தேடிகொண்டிருந்தபோது அஷ்ட வசுக்கள் பற்றிய அத்யாயம் இருந்தது. அவற்றில் ஒருவரே அனலன். 

வசுக்கள் அஷ்ட திக் பாலகர்கள், ஏகாதச ருத்திரர்கள் போல ஒரு தேவர் குழாம். சைவத்தில் இவர்கள் சிவனின் பூதகணங்கள் என்றும் வைணவத்தில் இவர்கள் விஷ்ணுவின் சேவகர்கள் என்றும் நம்பப்படுகிறது. 

பாகவதத்தில், தட்ச பிரஜாபதியின் மகள் வசுவிற்கும் தர்ம தேவனுக்கும் பிறந்தவர்கள் அஷ்ட வசுக்கள் என்ற குறிப்பு வருகிறது. தயை என்ற வசு தன் மனைவிக்காக வசிஷ்டரின் தேவ பசுவான நந்தினியை கவர்ந்து வருகிறான். இதனால் கோபமுற்ற வசிஷ்டர் வசுக்கள் அனைவரும் மனிதர்களாக பிறக்க சாபமிடுகிறார். பின் அவர்களின் வேண்டுதலை ஏற்று தயை தவிர மற்ற வசுக்கள் அனைவரும் ஓராண்டு மனித பிறப்பிற்கு பின் தேவ பதவியை பெறுவார் என்கிறார்.


மனித பிறவியை விரைந்து கழிப்பதற்காக கங்கையை வேண்டிய வசுக்கள் அவளை மானிட பிறப்பெடுத்து சந்தனு மன்னனை மணந்து தங்களை புத்திரராக பெற வேண்டுகின்றனர். புத்திரர் ஒவ்வொருவரும் பிறந்த உடனே கங்கையில் விட்டு தங்கள் பிறவியை முடித்து கொடுக்கும்படி வேண்டுகின்றனர். முதல் எழுவரும் விண்ணேகியபின் 8வது வசு பிரபாசன்  மட்டும் பீஷ்மனாக இவ்வுலகில் நிலைத்ததாக மகாபாரதம் கூறுகிறது.


அஷ்ட வசுக்களின் அடையாளங்களாக இரு கரங்கள், இரு கண்களுடன் சிவந்த நிறத்தில் இருக்கவேண்டுமென்றும், கரண்ட மகுடத்துடன் மஞ்சள் நிற ஆடை அணிந்து கோரைப்பார்களும் ரௌத்திரமான முகத்துடனும் கட்கம், கேடயம் போன்ற ஆயுதங்கள் ஏந்தி இருக்கவேண்டும். அமர்ந்த அல்லது நின்ற நிலையிலும் அமைக்கலாம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. TA கோபிநாத ராவ் வசுக்களின் 4 கரங்கள் கொண்ட வடிவங்கள் குறித்தும் ஆயுதங்கள் குறித்தும் குறிப்பிடுகிறார்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உள்ள எட்டு வசுக்கள் சிற்பம்:

  1. தரண் - பூமியை குறிக்கும் வடிவம். முதல் திருச்சுற்றின் கருவறைக்கு பின் கிழக்கு நோக்கி உள்ள சிற்பம். ஜடாமகுடத்துடன் வலது கரத்தில் சூலமும் இடது கரத்தில் தாமரையும் உள்ளது.

  2. துருவன் - நிலையான துருவநட்சத்திரத்தின் வடிவம். முதல் திருச்சுற்றில் வடதிசையில் சப்த கன்னிமார் சிற்ப தொகுதியின் முன் உள்ளது. கரண்ட மகுடத்துடன் வலகரத்தில் தாமரையும் இடது கரம் கடி ஹஸ்தமாகவும் உள்ளது.

  3. சோமன் - நிலவின் வடிவம். முதல் திருச்சுற்றின் வடதிசையில் அறுபத்து மூவர் சிற்ப தொகுதியின் முன் உள்ளது. ஜடாமகுடத்துடன் வலது கரம் தாமரை ஏந்தியும் இடது கரம் கடி ஹஸ்தமாகவும் உள்ளது.

  1. ஆபன் - நீரின் வடிவம். முதல் திருச்சுற்றின் வட கிழக்கு திசையில் சோமாஸ்கந்த மண்டபத்திற்கு இடது புறம் உள்ளது. ஜடா மகுடத்துடன் வலது கரம் வாள் ஏந்திய நிலையிலும் இடது கரம் கடி ஹஸ்தமாகவும் உள்ளது. 

  2. அனிலன் - காற்றின் வடிவம். சிற்பம் நிர்மாணிக்கப்பட்டு பின்னாளில் மறைந்திருக்கலாம்.

  3. அனலன் - தீயின் வடிவம். முதல் திருச்சுற்றில் தென் திசையில் கரண்ட மகுடத்துடன் வலது கரத்தில் மழு ஏந்திய நிலையிலும் இடது கரம் கடி ஹஸ்தமாகவும் உள்ளது.

  1. பிரத்யுஷன் - சூர்ய உதயத்தின் தெய்வமான உஷையின் வடிவம். முதல் திருச்சுற்றின் தென் திசையில் கிரீட மகுடம். வலது கரம் தாமரையை ஏந்திய நிலையிலும் இடது கரம் கடி ஹஸ்தமாகவும் உள்ளது.

  1. ப்ரபாசன் - ஒளியின் வடிவம். முதல் திருச்சுற்றின் கருவறைக்கு பின் கிழக்கு நோக்கி உள்ள சிற்பம். ஜடாமகுடத்துடன் வலது கரம் சூலமும் இடது கரம் மழுவும் ஏந்தி உள்ளது.
      

வசுக்கள் சிற்பங்களுடன்  மருத்துவ தேவர்களான அஸ்வினி தேவர்களின் சிற்பங்களும் உள்ளன. தில்லை கோயில் கோபுர கோஷ்டங்களில் அஸ்வினி தேவர்களின் சிற்பங்கள் உள்ளன. அஸ்வினி தேவர்கள் அமுதத்தை காப்பவர்களாகவும், இறப்பின்மையை கொடுப்பவர்களாகவும் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சிவனின் எட்டு வீரசெயல்களில் காலனை வதம் செய்ததும் மீண்டும் பிறப்பளித்ததும் நிகழ்ந்த தலமாக திருக்கடையூர் கருதப்படுவதால் இறப்பு - மீள்பிறப்பின் குறியீடாக அஷ்ட வசுக்களும் குதிரை முகம் கொண்ட மருத்துவ தேவர்களான அஸ்வினி தேவர்களும் இங்கு எடுப்பப் பட்டிருக்கலாம். சிற்பங்கள் சோழர் கால சிற்ப அமைப்பில் அமைந்துள்ளன.

வெண்முரசின் இமைக்கணத்தில் மற்ற 7 வசுக்களும் பீஷ்மரை சந்திக்கும் காட்சி உள்ளது.

காலசம்ஹாரர் புகைப்படம் நன்றி : Aaroor photos

அடிக்குறிப்புகள் 



மனோ 
25-10-2026

Comments

Popular posts from this blog

செய்நன்றி ❤️✨

எனது கல்லூரி துறைத்தலைவர் இப்போது Pollachi Institute of Engineering and Technology கல்வி ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் அழைப்பின் பேரில் Pollachi Institute of Engineering and Technology என்ற கல்லூரியில் சென்ற திங்கள் அன்று முதலாம் ஆண்டு, மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றினேன். இதை சொன்னபோது சில நண்பர்கள் ஆர்வத்துடன் என்ன பேசப்போகிறேன் என்று கேட்டனர், 2 நாட்கள் உழைத்து தயார் செய்த உரையென்பதாலும் பொதுவான உரையென்பதாலும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ஆற்றிய உரையை இங்கு எழுதுகிறேன். (இது உரையின் எழுத்து வடிவம், சென்ற வாரம் கேட்டுக்கொண்டார்கள் என்பதை, “போன வாரம் கேட்டாங்க” என்று வாசிக்கவும்)  Dear Boys and girls சென்ற வாரம் mam அழைத்து முதலாம் ஆண்டு மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சொன்னபோது நான் கேட்ட முதல் கேள்வி ஆங்கிலத்திலா தமிழிலா என்று, பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் அதனால் தமிழ் ஆங்கிலம் கலந்து பேசும்படி சொன்னார். முழுதும் தமிழில் பேசினாலும் செயற்கையாக இருக்கும், முழுதும் ஆங்கிலத்தில் பேசினாலும் பின் தொடர்வதில் சிக்கல் இருக்கும். மறுநாள் தான் ஒப்புக்கொண்ட...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...