சோழ அரசும் சமூகமும் - நூல் குறிப்பு
Imperial Cholas எனும் சோழ பேரரசின் காலம் கலை பண்பாட்டு கோணத்தில் ஒரு பொற்காலம். நிலவியல் பொருளாதாரத்திலும் பல சீர் திருத்தங்கள் சோழர் காலத்தில் நடைபெற்றன. வரலாற்று ஆர்வம் இல்லாதவருக்கு கூட ராஜராஜசோழன் ஒரு superhero. பொ.யு 845ல் விஜயாலயன் தஞ்சையை கைப்பற்றியது முதல் பொ.யு 1279ல் மூன்றாம் ராஜேந்திரனின் ஆட்சிக்காலம் முடிவது வரை 400 ஆண்டுகள் அகண்ட பாரதத்தின் பல நூறு கி.மீ நிலப்பரப்பை ஆண்ட ஒரு அரச மரபை புரிந்துகொள்வதில் இன்னும் பல விடுபடல்கள் உள்ளன.
இந்நிலையில் சோழ அரசின் ஒட்டுமொத்த சித்திரத்தையும் அதன் பல உட்கூறுகளையும் வரலாற்றுத்தன்மையுடன் விளக்கும் முக்கியமான ஆய்வு நூல் சோழ அரசும் சமூகமும்.
எ சுப்புராயலு சமகாலத்தில் சோழர் காலத்தை குறித்து பல முக்கிய ஆய்வு முடிவுகளை முன்வைத்த ஆய்வறிஞர். நொபுரு கரஷிமாவுடன் இணைந்து பல ஆய்வு கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ளார். வலங்கை - இடங்கை பிரிவு, விவசாய நிலமுடையவர்களும் - வணிகர்களும் என்ற பார்வையை கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் மறுத்து இரு பிரிவுகளும் குறிப்பிட்ட சாதிப்பிரிவுகளில்லை அவை தொகுக்க சாத்தியமான பல சாதி குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பதை முன்வைத்தவர்
வெறும் தரவு குவியலாக இருக்கும் பல வரலாற்று நூல்களுக்கு நடுவே ஒவ்வொரு தரவையும் அடுக்கி அதிலிருந்து ஒரு inference ஐ சென்றடையும் இந்நூல் முக்கியமானது.
1935-37ல் நீலகண்ட சாஸ்திரி முதன் முதலில் கல்வெட்டு சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய 3 பாகம் கொண்ட சோழர்கள் இந்திய வரலாற்றெழுத்தில் ஒரு கிளாசிக். சோழர் காலத்தை ஆரயத்தொடங்கும் எந்த ஆய்வளாரும், வாசகரும் முதலில் அவரிடமிருந்தே தொடங்க முடியும். நூலின் தொடக்கத்திலேயே ஆசிரியர் இதை குறிப்பிடுகிறார். சாஸ்திரியின் பல முடிவுகள் இந்நூலில் மீளாய்வு செய்யப்படுகின்றன.
இந்நூலின் கட்டுரைகளை மூன்று வகையாக தொகுக்கலாம்.
சோழர் காலம் குறித்த ஒட்டுமொத்த அறிமுகம்.
குடிகள், சாதிய அமைப்பு குறித்த கட்டுரைகள்.
வரி முறைமைகள் குறித்த கட்டுரைகள்.
சோழ பேரரசென்று ஒரு பொது அடைப்புக்குறிக்குள் அடக்கினாலும் முக்கியமான நான்கு காலகட்டங்கள் உள்ளன.
முதல் காலகட்டம் - ஆட்சி விஸ்தீரணம் மற்றும் நிலைத்தன்மை. விஜயாலயன் தொடங்கி உத்தம சோழன் வரை. பொ.யு 845 - பொ.யு 985.
இரண்டாம் காலகட்டம் - பேரரசர்களின் காலகட்டம். முதலாம் ராஜராஜன் தொடங்கி அவனது பெயரர்கள் வரை. பொ.யு 986 - பொ.யு 1069.
மூன்றாம் காலகட்டம் - சோழர் சாளுக்கியர் ஆட்சி தொடக்கம், சிற்றரசர்களின் எழுச்சி, முதலாம் குலோத்துங்கன் முதல் இரண்டாம் குலோத்துங்கன் வரை. பொ.யு 1070- பொ.யு 1178.
நான்காம் காலகட்டம் - வட்டார ஆட்சியாளர்களின் முழு அதிகாரம், சோழர் ஆட்சி முடிவு. இரண்டாம் ராஜராஜன் காலம் தொடங்கி மூன்றாம் ராஜேந்திரன் காலம் வரை. பொ.யு 1179- பொ.யு 1279.
நூல் முழுக்க இந்த சட்டகம் (frame) பின்பற்றப்படுகிறது. இதை ஒற்றியே ஆட்சியிலும் சமூக பொருளாதார வரலாற்றிலும் நடக்கும் மாற்றங்கள் ஆராயப்படுகின்றன.
இப்போது யோசிக்கும்போது கோயில் கலையிலும் இந்த சட்டகம் கொண்டு அணுக முடிகிறது. குடந்தை கீழ்கோட்டத்தின் சிற்பங்களை ஒப்பிடும்போது தாராசுரத்திற்கு பின் எழுந்த கோயில்கள் சிலவற்றை தவிர அனைத்துமே குழந்தை விளையாட்டு என்றே எண்ணத்தொன்றுகிறது.
சோழர் காலம் குறித்த ஒட்டுமொத்த அறிமுகம்
முதல் அத்யாயம், அரசரின் மண முறை, ஆட்சி, நிலமுறை, பட்டங்கள், வரி முறை, சமயம், படை, காவல் மற்றும் நீதி முறை என சோழ பேரரசின் ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை அளிக்கிறது. ஒரு நிலவியல் வரலாற்று ஆசிரியராக திருமுறைகளை மீட்டது ராஜராஜ சோழன் என நம்பப்படுகிறது என்று கூறி நிறுத்திவிடுகிறார். அது ராஜராஜசோழனா என்று ஆராயவேண்டியது குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற சிற்ப, கலை வரலாற்று ஆய்வாளர்களின் பணி.
குடிகள், சாதிய அமைப்பு குறித்த கட்டுரைகள்
ஆள்பெயர்கள் குறித்த கட்டுரை - கல்வெட்டுக்களில் காணப்படும் நீண்ட பெயர்களை பார்த்து பல முறை குழம்பிப்போனதுண்டு 5 பகுதிகள் கொண்ட பெயர் என்றால் இந்த முறையில் அமைந்திருக்கும் என்று விவரிக்கிறார்.
1 ஊர் 2 குடி 3 தந்தை 4 தான் 5 பட்டம். பெரும்பாலான சமயங்களில் இந்த 5 பகுதியும் இல்லாமல் ஐந்தில் சில பகுதிகள் மட்டும் இருந்தால் அவற்றை எப்படி விளங்கிகொள்வதென விளக்கி இருக்கிறார்.
செல்வக்கருவூலமாக இருக்கும் கோயில் சார்ந்த நிர்வாகத்தில் குற்றங்களும் நிறைந்திருக்க கூடும். கோயில் நிலங்களை அல்லது சொத்தை களவாடியது குறித்து ஒரு சில தரவுகளே கிடைக்கின்றன “கோசெய்தல் என்ற அரச தண்டம்” கட்டுரை கோயில் நிர்வாகம் தொடர்பான குற்றங்களையும் அதற்கு அரசர் கொடுத்த தண்டனையையும் குறிப்பிடுகிறது.
புதிதாக உருவாக்கப்படும் பிரம்மதேயங்கள் ஒவ்வொன்றிலும் பிராமணர்கள் குடியேறினர். ஓவ்வூர்களை ஒட்டி நிலக்கிழார்கள் உழுகுடிகள் அடிமைகள் என்று பல குடியினர் வாழ்ந்தனர். உழுகுடிகள் நிலத்தை குத்தகைக்கு பெற்று விளைவித்து குத்தகை தொகையையும் வேலையாட்களுக்கு ஊதியமும் அரசிற்கு வரியும் செலுத்தினர். அடிமை முறை இயல்பாக இருந்தது. ஒருவரின் உடைமைகளை பறிப்பதென்பது நிலம், மணை, அவரது அடிமைகள் மூன்றையும் பறிப்பது என்ற முடிபுகள் முன்வைக்கப்படுகின்றன.
தொல்காப்பிய சூத்திரத்தின் துணையுடன் மாராயன் எனும் பட்டம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. ராயன், அதி அரையன், பேர் அரையன் மாராயன் போன்ற பட்டங்கள் அந்தந்த அரசன் கொடுத்ததாகலாம் என்கிறார். எகா - ராஜராஜ பிரஹ்ம மாராயன்.
அஞ்சுவண்ணம் என்ற வணிகர் குழு இஸ்லாமிய வணிகர் குழு என்று விசாகப்பட்டினம் கல்வெட்டு மற்றும் பல சான்றுகளை கொண்டு நிறுவுகிறார்.
வரிமுறைகள் குறித்த கட்டுரைகள்
கடமையும் குடிமையும் கட்டுரை நான்கு வகையான வரிகளை விவரிக்கிறது.
கடமை - இறை அல்லது ஒபாதி என்றும் அழைக்கப்படும். நில உடமையாளரிடம் பெறப்பட்டது
குடிமை - உழைப்பாக பெறப்பட்டது. உழுது பயிரிட்டவர் செலுத்தும் வரி.
பாட்டம் - ஆயம் தொழில் வரி உழவு அல்லாத தொழில் செய்வோர் மீது விதிக்கப்பட்ட வரி.
பிறவரிகள் - காணிக்கை, தண்டம், சுங்கம் போன்ற பிற வரிகள்.
DD kosambi புள்ளியல் (Numismatics) பகுப்பாய்வு வரலற்றாய்விற்கு பயன்படும் என்று நிறுவி இருந்தாலும் அதனை தொடர்ந்து வரலாற்றாசிரியர்கள் முன்னெடுக்கவில்லை. இந்த முறையை பின்பற்றி நில ஆவணங்கள் சார்ந்த சோழர் கால கல்வெட்டுக்கள் 270ஐ தொகுத்து நில பரிவர்த்தனை சார்ந்த சொற்கள் எண்ணிக்கை கொண்டு சில போக்குகளை முன்வைக்கிறார். சிந்தைந்துள்ள துண்டு கல்வெட்டுக்களையும் இந்த முறையில் பயன்படுத்த முடியும்.
பிராமணர்கள் தனியாகவும் கூட்டாகவும் 10ம் நூற்றாண்டு அளவில் செல்வாக்கு மிக்க நிலக்கிழாராக இருந்தனர்.
சோழராட்சியின் பிற்பகுதியில் பிராமணரல்லாத ஊர்களிலும் தனியார் நிலவுடைமையாளர்கள் இருந்தனர்.
கோயில்கள் கொடையின் மூலமும் நிலங்களை வாங்கியதன் மூலமும் நிலவுடைமை நிறுவனங்களாயின.
ஆய்விற்குட்பட்ட காலத்தில் விற்பனையின் வாயிலான நிலபரிமாற்றம் குறைந்துகொண்டே வந்தது.
இந்த ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான தரவு, பொ.யு 1141ம் ஆண்டு இரண்டாம் குலோத்துங்கன் தன் மகன் பிறந்த நட்சத்திர நாளன்று கோயிலில் சிறப்பு விழா கொண்டாட ஒரு பிராமண ஊரை சேர்ந்த பிடகையில் நிலம் வாங்கி கோயிலுக்கு திருநாமத்துகாணியாக கொடுத்தார். இதனால் நிலமனைத்தும் அரசருக்கே உரிமையுடையது என்ற கருத்தும் தவறானதென்கிறார்.
தேவதானம் குறித்த கட்டுரைகளில் குடிநீக்கி தேவதானம்,குடிநீங்கா தேவதானம் என இரண்டு முறைகள் இருந்ததை குறிப்பிடுகிறார்.
குடிநீக்கி தேவதானமாக அறிவிக்கப்பட்ட ஊரில் இருக்கும் நிலக்கிழார்கள் அவர்கள் நிலத்திற்கான விலை கொடுக்கப்பட்டு நீக்கப்பட்டனர். கோயில் அந்த நிலங்களில் வேளாண்குடிகளை குத்தகைக்கு அமர்த்தி விளைவித்து வருமானம் பெரும். இம்முறை திருநாமத்து காணி எனப்பட்டது..
குடிநீங்கா தேவதான முறையில் அறிவிக்கப்பட்ட ஊரில் இருக்கும் நிலக்கிழார்கள் அவ்வூரிலேயே வசித்து அரசனுக்கு பதிலாக கோயிலுக்கு வரியை செலுத்தவேண்டும்.
அனைத்து கட்டுரைகளிலும் ஒரு academician க்கே உரிய ஆய்வு முறைமை உள்ளது. உதாரணமாக கோனேரின்மை கொண்டான் என்ற ஒரு சொல்லுக்காக அந்த சொல் உள்ள 200 கல்வெட்டுக்களை அட்டவணையிட்டு அவற்றுள் உள்ள பேதங்களை பொருத்திப்பார்த்து ஆய்வு முடிவிற்கு வருகிறார். அட்டவணை கொடுக்கும் inference ன் மீது ஆய்வாளனின் முன்னறிவும் செயல்படுகிறது. கோனேரின்மை கட்டுரையில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திற்கு பிறகு தான் கோனேரின்மை கொண்டான் எனும் சொல் கல்வெட்டுக்களில் விரிவாக காணப்படுகிறது. சிற்றரசுகளின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும்பொருட்டு இந்த போக்கு எழுந்திருக்கலாம் என்கிறார். கல்வெட்டின் மீள்வாசிப்பில் இந்த முடிவுகள் பெரும் திறவுகோலாக இருக்கும் .
ஒவ்வொரு superhero உருவாகும்போதும் அவரை குறித்த தொன்மங்களும் உடனேயே வளர்ந்து வரும். சமீபத்தில் ஒரு காணொலியில் யானை புகாத படி திருவானைக்கா கோயிலை கட்டினார் ராஜராஜசோழன் என்று ஒரு சங்கீத அறிஞர் பேசிக்கொண்டிருந்தார். நம்மை பொறுத்தவரை சோழ பேரரசென்பதே ராஜராஜன் மட்டும் தான். தொன்மங்கள் தேவைதான் ஆனால் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்வதற்கு சுப்புராயலு போன்ற ஆசிரியர்களை தான் சரணடையவேண்டும். இல்லையெனில் ஈல் மீன், ஒருலட்சம் யானைகள் போன்ற கதைகளை கேட்டுக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
சோழ அரசும் சமூகமும் - எ. சுப்புராயலு காலசுவடு வெளியீடு.
சுப்புராயலு தமிழ் விக்கி - விக்கி
நூல் சுட்டி - சுட்டி
மனோ
17 அக்டோபர் 2026
திருச்சி
Comments
Post a Comment